முதல்வரின் பெருமைக்காக ரத்த தானம் வழங்குமாறு காவலர்களை மிரட்டுவதா? - ராமதாஸ்

அளவுக்கு அதிகமாக பெறப்பட்ட குருதியை ஒரு கட்டத்திற்கு மேல்...

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறை சார்பில் வரும் 29-ஆம் தேதி முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் நடைபெறவுள்ள குருதிக் கொடை முகாமில் 40 வயதுக்குட்பட்ட காவலர்கள் அனைவரும் கண்டிப்பாக குருதிக் கொடை வழங்க வேண்டும் என ஆணையிடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிக அளவில் குருதிக் கொடை பெறப்பட்டதாக மார் தட்டிக் கொள்வதற்காக காவலர்கள் கட்டாயப்படுத்தி இரத்தத்தை தானமாக வாங்குவது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக காவல்துறையில் சுமார் ஒன்றேகால் லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கான குருதிக் கொடை முகாமை வரும் 29-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த முகாமை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைக்கவுள்ளார். முதல்வர் முன்னிலையில் குருதிக் கொடை முகாம் நடப்பதால் புதிய சாதனை படைக்கும் நோக்குடன் காவல்துறையில் பணியாற்றுவோரில் 50 விழுக்காட்டினரிடமாவது குருதிக் கொடை பெற காவல்துறை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக 40 வயதுக்குட்பட்ட காவலர்கள் அனைவரிடமும் சுயவிருப்பத்தின் பேரில் குருதிக் கொடை வழங்குவதாக படிவத்தில் கட்டாயப் படுத்தி கையெழுத்து வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. குருதிக் கொடை வழங்குபவர்களுக்கு 2 நாள் விடுப்பு வழங்கப்படும் என்றும் சலுகை வழங்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இரத்த தானம் வழங்குவது மிகவும் பாராட்டத்தக்க விஷயமாகும். குருதிக் கொடையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பது தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழக மக்களுக்கு இயல்பாகவே குருதிக் கொடை வழங்க விருப்பமும், விழிப்புணர்வும் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது குருதியை கொடையாகப் பெற வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது. அது குருதிக் கொடை என்ற தத்துவத்தையே கொச்சைப்படுத்தும் செயலாகும். அதுமட்டுமின்றி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல குருதியை அதிகமாக பெறுவதும் ஆபத்தானது ஆகும். கொடையாக பெறப்படும் குருதியை அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு மட்டும் தான் பாதுகாத்து வைக்க முடியும். ஒன்றேகால் லட்சம் பேர் கொண்ட காவல்துறையில் 60 ஆயிரம் பேரிடமிருந்து குருதி கொடையாக பெறப்பட்டால், அதை பாதுகாத்து வைப்பதற்கான கட்டமைப்பு தமிழ்நாட்டில் இல்லை.

கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்தநாளையொட்டி 14.02.2014 அன்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கான குருதிக் கொடை முகாம் நடத்தப்பட்டது. குருதிக்கொடை வழங்குவதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட அந்த முகாமில் 53,129 போக்குவரத்துத் தொழிலாளர்கள் குருதிக் கொடை வழங்கினார்கள். அளவுக்கு அதிகமாக பெறப்பட்ட குருதியை ஒரு கட்டத்திற்கு மேல் பாதுகாக்கவும் முடியாமல், பயன்படுத்தவும் முடியாமல் மருத்துவக் கழிவுகளாகக் குப்பையில் கொட்டப்பட்டன. இப்போதும் சுமார் 60,000 பேரிடம் குருதிக் கொடை பெறப்பட்டால் அதுவும் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படும் ஆபத்து உள்ளது. உயிரைக் காக்கும் குருதியை தேவையில்லாமல் வாங்கி வீணடிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இதுபோன்ற அபத்தமான கூத்துகள் அனைத்துக்கும் தனிமனித துதிபாடல்களும், அதை ஊக்குவிக்கும் ஆட்சித் தலைமைகளும் தான் காரணம் ஆகும். 4 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா பிறந்தநாளில் குருதிக் கொடையில் சாதனை படைக்கப்பட்ட நிலையில், தமது முன்னிலையில் அதைவிட அதிக தொழிலாளர்களிடம் குருதிக் கொடை புதிய கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற இன்றைய ஆட்சியாளர்களின் விளம்பர மோகம் இந்தக் கொடுமைகளுக்கு காரணம் ஆகும். சாதனை படைக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. தமிழகத்தில் நல்லாட்சி வழங்கி சாதனை படைக்கலாம். ஆனால், ஒரு புறம் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களின் உயிர்களைப் பறிப்பது, மற்றொருபுறம் பசுமை சாலை என்ற பெயரில் திட்டம் கொண்டு வந்து வாழ்வாதாரத்தை பறிப்பது என மக்கள்விரோத செயல்களை செய்து விட்டு, காவலர்களிடம் குருதிக் கொடை பெற்று சாதனை படைக்க துடிப்பது கொடூரமானது.

தமிழகக் காவல்துறை உண்மையாகவே குருதிக்கொடையில் சாதனை படைக்க நினைத்தால், அதற்கு அற்புதமான வழிகள் உள்ளன. ஒரே நாளில் குருதிக் கொடை முகாம் நடத்துவதற்கு பதிலாக குருதிக் கொடை வாக்குறுதி முகாம்களை நடத்தி, குருதி கொடை வழங்கத் தயாராக உள்ள காவலர்களிடம் இருந்து விவரங்களை வாங்கி, அதை அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், குருதி வங்கிகள் ஆகியவற்றிடம் வழங்கலாம். அவற்றுக்கு குருதி தேவைப்படும் போது பட்டியலில் உள்ள காவலர்களை அழைத்து குருதியை கொடையாகப் பெற்று தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கலாம். இது தான் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய, சாத்தியமான வழியாக இருக்கும். எனவே, விளம்பரத்திற்காக குருதியை வாங்கி வீணடிப்பதை விட, தேவைப்படும் நேரத்தில் குருதி வழங்கத் தயாராக உள்ள காவலர்கள் பட்டியலை தயாரித்து குருதி வங்கிகளிடம் வழங்க தமிழக அரசும், காவல்துறையும் முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close