கடலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருத்தாசலம் ராணி திருமண மண்டபத்தில் நடந்தது,
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘எனது வீட்டிலேயே, நான் உட்காரும் இடத்தில், எனது நாற்காலியின் பக்கத்தில் ஒட்டு கேட்கும் கருவி இருக்கிறது. யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்பது பற்றி ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருக்கிறோம். அதனை கண்டுபிடித்து எடுத்து பார்த்தோம். லண்டனில் இருந்து வந்து இருக்கிறது. அது சாதாரண விலை கிடையாது. அதிகமான விலை உள்ள ஒரு கருவி’ என்று கூறினார்.
கடந்த இரண்டு மாதங்களாக ராமதாஸ் மற்றும் அவரது மகனும் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே நிலவி வந்த உட்கட்சி மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில், பா.ம.க.வின் முழு அதிகாரம் ராமதாஸுக்கே உண்டு என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, கட்சிக்கு விரோதமாக செயல்படும் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக ராமதாஸின் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.