குடிநீர் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக அரசு நிலங்களை ஆளவந்தார் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் டாக்டர் ராமதாஸ் இன்று கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது. : சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களுக்கு மாற்றாக, அதே அளவு நிலங்களை ஆளவந்தார் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வன்னியர் குல சத்திரிய மரபில் வெங்கடபதி நாயகர்& அகிலாண்டம்மாள் இணையருக்கு மகனாக 1835&ஆம் ஆண்டில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை இறைபணிக்காக வழங்கினார். அவரது பெயரில் செயல்பட்டு வரும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது. ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைபணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என்ற வினா எழுந்த போது, அவற்றைக் கல்விப் பணிக்காக பயன்படுத்தலாம் என்று நீதியரசர் சேஷாத்ரி அய்யர் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 1918&ஆம் ஆண்டு ஏப்ரல் 25&ஆம் நாள் தீர்ப்பளித்தது. அதற்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது.
ஆனால், ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின் கீழ் வரும் சொத்துகளை, அவரது நோக்கங்களுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கை அரசு கைவிட வேண்டும் என்று தங்களுக்கு பல முறை நான் கடிதம் எழுதியுள்ள நிலையில் அதே போக்கு தொடருவதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை ஒட்டிய பேரூர் என்ற இடத்தில் தினமும் 40 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ரூ. 4,276.44 கோடியில் அமைக்கபட உள்ளது. இது தென் சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக கடல் நீரை குடிநீராக்கும் மூன்றாவது ஆலையாகும். அத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21&ஆம் நாள் நீங்கள் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி வைத்தீர்கள். இந்தத் திட்டத்திற்காக ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 85.51 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து நீண்டகால குத்தகை அடிப்படையில் அரசால் பெறப்பட்டுள்ளது.
தென்சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக ஏற்கனவே இரு இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட சூலேரிக்காடு என்ற இடத்தில் ஒரு நாளைக்கு, 11 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை 2013 முதல் செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில் 15 கோடி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலை ரூ.1516 கோடி செலவில் அமைக்கப்பட்டு, அந்த ஆலையை கடந்த பிப்ரவரி 24&ஆம் நாள் நீங்கள் நேரடியாக திறந்து வைத்தீர்கள். இந்த இரு ஆலைகளுக்காகவும் ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 125 ஏக்கர் நிலங்கள் தமிழக அரசால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் மொத்தம் 210.51 ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு பெறப்பட்டுள்ளன.
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் எந்தெந்த நோக்கங்களுக்கான பயன்படுத்தப் பட வேண்டும் என்பதை ஆளவந்தார் அவரது உயில் மூலமாகவும், உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பின் மூலமாகவும் உறுதி செய்திருக்கிறார்கள். அந்த நோக்கங்களுக்காக மட்டும் தான் ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு மாறாக, ஆளவந்தார் நிலங்கள் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. பரதமுனிவர் பண்பாட்டு மையம் அமைக்க 5 ஏக்கர் நிலம், சூரிய ஒளி மின் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 564 ஏக்கர் நிலம், தனியார் நில வணிக நிறுவனங்களுக்கு நிலம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு 210 ஏக்கர் நிலம் என ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இவை ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிரானவை. இவ்வாறு நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை முதலமைச்சராகிய நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக, நெம்மேலியில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 29.175 ஏக்கர் நிலத்தை நீண்டகால குத்தகைக்கு எடுக்க செய்தி மற்றும் விளம்பரத்துறை முடிவு செய்திருந்தது. அதைக் கண்டித்து கடந்த ஆண்டு ஜூலை 12, 16 ஆகிய தேதிகளில் தங்களுக்கு நான் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும், திரைப்பட நகரம் செம்பரம்பாக்கம் பகுதியில் அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
அதேபோல், ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிரான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டெடுத்து ஆளவந்தார் அறக்கட்டளையிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். கடல்நீரை நிலத்தடி நீராக்கும் திட்டத்திற்காக குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட நிலங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், அந்த இடங்களை காலி செய்ய முடியாது என்பதாலும், அவை மக்களுக்குத் தேவையானத் திட்டங்கள் என்பதாலும் அத்திட்டங்களுக்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை.
ஆளவந்தாரின் வம்சத்தைச் சேர்ந்த வன்னிய குல மக்கள் இன்னும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர். இறைபணிக்கு பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஆளவந்தார் நாயகரின் சொத்துகளை வன்னிய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து ஆளவந்தாரின் சொத்துகளை அவரது நோக்கங்களுக்கு எதிராக தாரை வார்க்க தமிழக அரசு முயல்வதை வன்னிய மக்கள் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதை எதிர்த்து தமிழகம் இதுவரை காணாத வகையில் போராடுவார்கள். அதற்கு தமிழ்நாடு அரசு வழிவகுத்து விடக்கூடாது.
எனவே, ஆளவந்தார் நாயகரின் நோக்கத்திற்கு எதிராக தாரை வார்க்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை தமிழக அரசு மீட்க வேண்டும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு வழங்குவதற்கு தாங்கள் ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.