Advertisment

'வயது 83… கொடி பிடித்து முழங்கி போராட்டத்தை முன்னெடுப்பேன்': டாக்டர் ராமதாஸ்

வன்னியர்களின் 10.5% உள் ஒதுக்கீட்டை பெறுவதற்கு தனது 83 வயதில் கோலூன்றி நடக்கும் நிலை வந்தாலும் கூட இந்த ஊமைசனங்களுக்காக போராடுவேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
'வயது 83… கொடி பிடித்து முழங்கி போராட்டத்தை முன்னெடுப்பேன்': டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் 10.5% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisment

இந்த நிலையில், வன்னியர்களின் 10.5% உள் ஒதுக்கீட்டை பெறுவதற்கு தனது 83 வயதில் கோலூன்றி நடக்கும் நிலை வந்தாலும் கூட இந்த ஊமைசனங்களுக்காக போராடுவேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமகவினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில், நாமின்றி சமூகநீதியில்லை…
நிச்சயம் வெல்வோம் கலங்காதே! என்று குறிப்பிட்டு பாமகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

வன்னியர் 10.50% உள் இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு உங்களுக்கு கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும். இனி என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ற உங்களில் பலரின் ஏக்கத்தையும் நான் அறிவேன். உங்களின் ஏக்கத்தைப் போக்குவதற்காகவும், உண்மையை விளக்குவதற்காகவும் தான் பாட்டாளிகளாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்திருந்தால் அது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்து இருக்கும். நாம் அனைவரும் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்திருப்போம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நமது எதிர்பார்ப்புக்கு மாறாக வந்திருக்கிறது. இது மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு அல்ல என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு இது வருத்தப்பட வேண்டிய தீர்ப்பு இல்லை என்பதும் உண்மை தான்.
இன்னும் கேட்டால் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, ஒற்றை சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவது சரியானது தான் என்பன உள்ளிட்ட உரிமைகளை இந்த வழக்கின் மூலம் வென்றெடுத்துக் கொடுத்துள்ளோம். இது இப்போதைக்கு மட்டுமல்லாமல், இனி வருங்காலங்களிலும் உரிய சமூகநீதி கிடைக்காமல் பாதிக்கப்படும் வன்னியர்களைப் போன்ற சமூகங்களுக்கு சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுப்பதற்கு இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் பெருமளவில் உதவும்.

இவையெல்லாம் மகிழ்ச்சி தான். ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும்? என்ற உங்களின் வினா, எனது காதுகளில் விழாமல் இல்லை.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் காலம், காலமாக பின்தங்கியிருக்கும் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யாமல் தமிழகத்தில் எவரேனும் சமூக நீதி பேச முடியுமா? அதுவும் கூட, போதுமான புள்ளிவிவரங்கள் இருந்தால் வன்னிய மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், வன்னிய மக்களுக்கு உரிய நியாயமான சமூகநீதியை தமிழ்நாட்டில் யாரால் மறுக்க முடியும்?

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக 7 காரணங்களை அடுக்கியது. அவை நியாயமற்ற காரணங்கள் என்பதை அப்போதே உரிய ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன். அதன்பின் 5 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான 6 தடைகளை தகர்த்து இருக்கிறோம்.

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பது ஒரே ஒரு முட்டுக்கட்டை தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை என்பது தான் அதுவாகும். ஐந்து மாதங்களில் 6 தடைகள் தகர்த்தெறிந்த நமக்கு, மீதமுள்ள ஒற்றை முட்டுக்கட்டையை அரசியல் போராட்டத்தின் மூலம் கடக்கத் தெரியாதா? அது என்ன நமக்கு புதிதா?

“அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?” புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியதைப் போல, எளிதாகக் கிடைப்பதற்கு சமூக நீதி ஒன்றும் சுக்கோ, மிளகோ இல்லை. சமூகநீதி என்பது மிகப்பெரிய வரம்…. தவமிருந்தால் தான் அதைப் பெற முடியும். சமூகநீதிக்கான எனது 43 ஆண்டு கால போராட்டத்தில், இதே போல எத்தனையோ ஏமாற்றங்கள், இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். ஏமாற்றத்தைச் சந்தித்தால் அடுத்து எதிர்பார்ப்பு நிறைவேறும் என்பதும், இறக்கத்தை எதிர்கொண்டால் அதன்பின் ஏற்றம் கிடைக்கும் என்பதும் எவரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், நமது தரப்பு நியாயத்தை சமூகநீதியை வழங்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு உணர்த்தினால் தான் இது சாத்தியமாகும்.

“முதுமை எவ்வளவு தான் என்னை வாட்டினாலும், கோலூன்றி நடந்தாலும் நான் இறுதி வரை இந்த ஊமை சனங்களுக்காக போராடி என் உயிரை விடுவேன்” என்று எனது முத்துவிழாவில் நான் வாக்குறுதி அளித்திருந்தேன். இப்போது எனக்கு 83 வயது தான். கோலூன்றி நடக்கும் நிலை வந்தாலும் கூட இந்த ஊமைசனங்களுக்காக போராடுவேன் என்று கூறிய நான், கொடி பிடித்து முழங்கும் வயதில் சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்க மாட்டேனா? போராடாமல் என்னால் இருக்க முடியுமா?

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை கடந்த 43 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறோம். கடந்த 2020&ஆம் ஆண்டு திசம்பர் ஒன்றாம் தேதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை நோக்கி அணிவகுப்பதற்கான இரண்டாம் அலை போராட்டங்களை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நாம் தொடங்கிய போது, இந்த முறை நிச்சயமாக இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம் என்ற நம்பிக்கை உங்களில் எத்தனை பேருக்கு இருந்தது? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், வன்னியர் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்காமல் ஓயப்போவதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதைப் போலவே 80 நாட்களுக்குள் வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டை நாம் வெற்றிகரமாக வென்றெடுத்தது மிகப்பெரிய வரலாறு.

அதேபோல், இப்போதும் நாம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிச்சயமாக வென்றெடுப்போம். அதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காகத் தான் சென்னையில் நாளை பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவின்படி சமூகநீதிக்கான நமது அடுத்தக்கட்ட போராட்டம் தொடங்கும்; அது வெற்றியில் முடியும்.

அதற்கும் முன்பாக இன்னொரு உண்மையையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். வன்னியர்கள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், நம்முடன் இணைந்து தமிழக அரசும், மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி வாதிட்டது. இப்போதும் கூட சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைக் கடந்து தேசிய அளவில் சமூகநீதியை பாதுகாப்பதற்கான கூட்டமைப்பு ஒன்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறார். இரு வாரங்களுக்கு முன்பு தான் அவரது முயற்சிக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தேசிய அளவில் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது ஆட்சியின் கீழ் இருக்கும் தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், அக்கறையும் இருக்காதா? அதனால், போராட்டம் நடத்தாமலேயே வன்னியர் இட ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. நமது இலக்கு வன்னியர் இட ஒதுக்கீடு தான். அதை அடைய எவ்வகையான பாதையிலும் பயணிக்க தயாராகவே இருப்போம்.” என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vanniyar Vanniyar Reservation Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment