விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், "நான் உட்கார்ந்திருந்த இடத்தில், என் பின்னாடி, நான் படுத்திருந்த இடத்தில் என 5, 6 கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. அதை கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன். இந்தக் கருவிகள் இங்கிலாந்தில் வாங்கப்பட்டிருக்கலாம் அல்லது பெங்களூருவில் கூட கிடைக்கிறது என்கிறார்கள். 10 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்யப்பட வேண்டுமாம். இதை யார் வைத்தார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
இது தமிழ்நாட்டில் இதுவரை நடக்காத மோசமான சம்பவம். இந்தக் கருவிகளை சார்ஜ் செய்ய, வீட்டில் உள்ளவர்களின் உதவி தேவைப்படும் என்பதால், வீட்டில் இருப்பவர்கள் மீதும், வெளியாட்கள் மீதும் சந்தேகம் உள்ளது. காவல்துறையினர் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். யார் வைத்தார்கள் எதற்காக வைத்தார்கள் என்று எனக்கு தெரியும். இப்போது அதை நான் சொன்னால் விசாரணை பாதிக்கப்படும். இதுவரை என் வாழ்நாளில் சந்திக்காத அசிங்கம் நிகழ்ந்துள்ளது". இவ்வாறு அவர் கூறினார்.
தைலாபுரம் தான் கட்சியின் அலுவலகம் என்றும், வேறு எங்கும் அதற்கு கிளைகள் கிடையாது. அப்படி இருந்தால் அது சட்டவிரோதம் என்று தெரிவித்தார். மேலும் கட்சியின் கொடியையும், தனது பெயரையும் பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தன்னால் நியமிக்கப்படாதவர்கள் புதிய பொறுப்புகளில் செயல்படுவது கட்சி விதிகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார். மேலும் அன்புமணி மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிவித்தார்.