அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தடையின்றி துவரம் பருப்புவழங்குவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. சென்னையில் மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு வினியோகிக்கப்படவில்லை. நவம்பர் மாதம் தொடங்கி 22 நாட்கள் ஆகி விட்ட நிலையில், பல நியாயவிலைக்கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களவைத் தேர்தல் வந்ததால், பருப்பு, பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்ய முடியாததால் தான் தாமதம் ஏற்பட்டதாகவும், இனி தாமதம் ஏற்படாது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இப்போது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்குத் தேவையான துவரம் பருப்புக்கான கொள்முதல் ஆணைகள் கடந்த செப்டம்பர் மாதமே வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசே தெரிவித்த பிறகும் கூட நவம்பர் மாதத்தில் பற்றாக்குறை நிலவுவது ஏன்?
நியாயவிலைக்கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதன் நோக்கமே வெளிச்சந்தையில் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவது தான். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் ஆகும். இதை உணர்ந்து கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப் படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ I