Advertisment

டி.என்.பி.எஸ்.சி-ஐ 2-ஆக பிரிக்க திட்டமா? ராமதாஸ் கடும் எதிர்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை தேர்வு செய்வதாக இருந்து, அதற்கு பணிச்சுமை அதிகமாக இருந்தால், இன்னொரு அமைப்பை உருவாக்குவது குறித்து ஆராயலாம். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மைக்காலங்களில் ஆண்டுக்கு சராசரியாக 6000 முதல் 7000 பேரை மட்டுமே தேர்வு செய்கிறது.

author-image
WebDesk
New Update
Ramadoss opposed bifurcation of TNPSC system

டிஎன்பிஎஸ்சி அமைப்பை இரண்டாக பிரிக்க பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சியை இரண்டாக பிரிக்கும் திட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆசிரியர்கள், மருத்துவர்கள், சீருடைப் பணியாளர்கள் போன்றவர்களை தேர்வு செய்ய துறை சார்ந்த தனித்தனி தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வரும் போதிலும், பெரும்பான்மையான அரசுப் பணிகளுக்கு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாகவே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

அந்த அமைப்பு சிக்கலின்றி செயல்பட்டு வரும் நிலையில், அதை இரண்டாக பிரிக்கவும், சார்பு நிலை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசின் எஸ்.எஸ்.சி போன்ற இன்னொரு தேர்வு வாரியத்தை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து முடிவு எடுப்பதற்காக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உயரதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வரும் 8&ஆம் நாள் திங்கள்கிழமை சென்னையில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாக பிரிப்பதற்கு இப்போது எந்தவிதமானத் தேவையும் எழவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2023&ஆம் ஆண்டிற்கான ஆள்தேர்வு அட்டவணையின்படி நடப்பாண்டில் 29 வகையான பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படவுள்ளது.

இதில் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படாத நான்காம் தொகுதி (குரூப் 4) பணிகள் தவிர மீதமுள்ள 28 வகையான பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 3,582 மட்டுமே. மொத்தமுள்ள 29 வகையான பணிகளில் 22 வகையான பணிகள் சார்புநிலைப் பணிகள் தான். அவை தவிர்த்து மீதமுள்ள 7 வகையான பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 500&க்கும் குறைவு தான்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பிரிப்பதற்காக தமிழக அரசு வகுத்துள்ள திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு முழுவதும் 500-க்கும் குறைவானோரை மட்டுமே தேர்ந்தெடுக்கும். மீதமுள்ள 3000 பணிகள், நான்காம் தொகுதி பணிகளுக்கு 4000 பேர் தேர்வு செய்யப்படுவதாக இருந்தால், அவற்றையும் சேர்த்து மொத்தம் 7000 பணிகளுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள தேர்வு வாரியம் தான் ஆட்களைத் தேர்வு செய்யும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். அதற்கு பொறுப்புடைமை அதிகம். அத்தகைய அமைப்பு வெறும் 500 பேரை மட்டும் தேர்ந்தெடுக்கும் என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட அமைப்பை சிறுமைப்படுத்தும் செயல் ஆகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் மீது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. அந்த அமைப்பு நடத்தும் நேர்காணல்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார்களும் உண்டு.

ஆனால், அவற்றைக் கடந்து ஒப்பீட்டளவில் அதன் செயல்பாடுகள் சிறப்பானவை. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்படும் தேர்வு வாரியம் சட்டப்பூர்வமான அமைப்பாகவே இருக்கும். அதற்கு எந்தவித பொறுப்புடைமையும் இருக்காது. அதில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை தேர்வு செய்வதாக இருந்து, அதற்கு பணிச்சுமை அதிகமாக இருந்தால், இன்னொரு அமைப்பை உருவாக்குவது குறித்து ஆராயலாம். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மைக்காலங்களில் ஆண்டுக்கு சராசரியாக 6000 முதல் 7000 பேரை மட்டுமே தேர்வு செய்கிறது.

இது தேர்வாணையத்திற்கு எந்தவித பணிச்சுமையையும் ஏற்படுத்தாது. ஆவின், மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையமே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டம் கடந்த 2021-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இயற்றப்பட்டது.

அப்போது கூட அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பணிச்சுமை எதுவும் இருப்பதாக தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது இப்போது புதிய வாரியம் அமைக்க வேண்டிய தேவை என்ன?

தமிழ்நாடு அரசுப் பணிக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆணையம் அனைத்து வகையான ஐயங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்; புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment