பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு-
பெருந்தகை வி.பி.சிங்கின் ஆன்மா மன்னிக்காது!
தெலுங்கானாவில் கடந்த 6-ஆம் நாள் தொடங்கிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 20 நாட்களில் 92% நிறைவடைந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் சமூகநீதியைக் காப்பதில் அம்மாநில காங்கிரஸ் அரசு காட்டும் அக்கறை வரவேற்கத்தக்கது.
தெலுங்கானா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும். திசம்பர் 9-ஆம் நாள் அதன் அறிக்கை அம்மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார். தெலுங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி நிர்வாகத்தில் வரலாற்றுச் சாதனை என்றும், மாநிலங்களில் சமூகநீதி வழங்க இது அவசியம் என்றும் காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
தெலுங்கானாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள்தொகை வெறும் 52% மட்டும் தான். ஆனால், அவர்களுக்காக சமூகநீதியை வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வியக்க வைக்கின்றன. சமூகநீதியில் தெலுங்கானா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கானாவுக்கு மிக அருகில் தான் தமிழ்நாடு என்ற மாநிலமும் உள்ளது. அதற்கு சமூகநீதியின் தொட்டில் என்று பெயர். தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 69.10% . ஆனால், அங்கு அவர்களுக்கு சமூகநீதி வழங்கப்படுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்காக மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால் அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தட்டிக்கழிக்கிறது தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் சமூக அநீதி அரசு.மொத்தத்தில் தமிழ்நாட்டுக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு.
தெலுங்கானாவில் 20 முதல் 25 நாட்களில் நடத்தி முடிக்கப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணகெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த முடியாதா? அதற்கான மனிதவளம் தமிழ்நாட்டில் இல்லையா? அதற்கான நிதி தமிழ்நாட்டில் இல்லையா? எல்லாம் இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இல்லை.
தமிழ்நாட்டை தற்போது ஆளும் அரசால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது; சமூகநீதி வழங்கப்படாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். சமூகநீதிக்கு இந்த அளவுக்கு துரோகம் செய்யும் தமிழ்நாட்டின் அரசை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கப்படும். இது உறுதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு-
— Dr S RAMADOSS (@drramadoss) November 27, 2024
பெருந்தகை வி.பி.சிங்கின் ஆன்மா மன்னிக்காது!
தெலுங்கானாவில் கடந்த 6-ஆம் நாள் தொடங்கிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 20 நாட்களில் 92% நிறைவடைந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.