சென்னை பனையூரில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற அரசியல் தலைமை குழு கூட்டத்தில் “ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டம் சட்ட விதிகளுக்கு முரணானது.” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஜூலை 20ம் தேதி அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் மோதல் நிலவி வருகிறது. டாக்டர் ராமதாஸ் பா.ம.க-வில் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி அறிவித்ததும், அன்புமணி அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. புதிய நிர்வாகிகள் நியமன கடிதத்தில் கடந்த 2 நாட்களாக அன்புமணியின் பெயரை ராமதாஸ் தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (08.07.2025) நடைபெற்றது. இதில், அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். குறிப்பாக டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி பங்கேற்றார்.
இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளிட்டவை பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்த செயற்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதே நேரத்தில், சென்னை பனையூரில் அன்புமணி தலைமையில் அரசியல் தலைமை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டம் சட்ட விதிகளுக்கு முரணானது.” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஜூலை 20ம் தேதி அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.