பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை கைது செய்ததற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் இங்கே.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
பணிநிலைப்பு கோரி போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? தி.மு.க.,வின் துரோகம், அடக்குமுறைக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்!
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசுப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012 ஆம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது.
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. பணிநிலைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பதிலாக மாநில திட்ட இயக்குநர் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆசிரியர்களின் பிரச்சினை குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்குகூட நேரம் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என்பது தெரியவில்லை. தற்காலிக ஆசிரியர்கள் எவரும் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதால் பணிநிலைப்புப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. தி.மு.க அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் தி.மு.க அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. நூறு நாட்கள் என்று கூறி, இன்றைக்கு ஆயிரம் நாட்களையும் கடந்து, இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் அவர்களுடைய கோரிக்கையைச் செவி சாய்க்கவும் இல்லை, பரிசீலனை செய்து, அவர்களுக்கு ஆவணமும் செய்யவில்லை. இது குறிந்து அவர்கள் குடும்பத்துடன் இன்றைக்கு, கோட்டையை நோக்கி பேரணி நடத்திய போது கைது செய்து, காவல் துறையை வைத்து அடக்கு முறையை ஏவி விட்டுள்ளனர் .பகுதி நேர ஆசிரியர்களைக் கைது செய்ததை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப்படுத்தாமல், கண்ணீர் மல்க வாழந்து கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;
பணிநிரந்தரம் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தை முற்றுகையிடும் அறப்போராட்டத்தை முன்னெடுக்க இருந்த பகுதி நேர ஆசிரியர்களைக் கைதுசெய்து அடக்குமுறையை ஏவிய தி.மு.க அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மிக நியாயமானவையாகும். நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கிறது.
ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சிற்பிகளாக விளங்குபவர்கள் ஆசிரியப்பெருந்தகைகள். அந்த ஆசிரியப்பெருந்தகைகளே வீதிக்கு வந்து தங்களது உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராட வேண்டியிருப்பது பெரும் இழிநிலையாகும். அறிவுக்கருவறையைத் தீர்மானிக்கும் ஆசிரியப்பெருமக்களது நியாயமான குரலுக்குச் செவிசாய்க்க மறுத்து, அவர்களை அரசதிகாரம் கொண்டு அடக்கி ஒடுக்க முற்படுவது பெரும் கொடுங்கோன்மையாகும். பணவீக்கமும், விலைவாசி உயர்வும் உச்சத்திலிருக்கும் தற்காலப் பொருளாதாரச் சூழலில், வெறும் 12,500 ரூபாய் எனும் சொற்ப வருமானத்தில் அவர்களைத் தற்காலிகப் பணியாளர்களாக வைத்திருப்பது ஏற்கவே முடியாத உழைப்புச் சுரண்டலாகும்.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்து அவர்களின் வாக்குகளைப் பெற்று, அதிகாரத்திற்கு வந்த தி.மு.க, இன்றைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து, போராடுவோரை அதிகாரப்பலம் கொண்டு அடக்க முற்படுவது துரோகமாகும். ஒவ்வொரு முறையும் ஆசிரியப் பெருமக்கள் போராட்டம் நடத்தும்போதெல்லாம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டாது, போராட்டத்தை சிதைப்பதிலேயே கவனமாக இருப்பதும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது இழுத்தடித்துக் காலங்கடத்துவதும் அட்டூழியத்தின் உச்சமாகும்.
12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணிபுரியும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் கேட்பதற்கான முழு உரிமையுண்டு. 3 ஆண்டுகள் பணிபுரியும் பணியாளர்களையே, பணிநிரந்தரம் செய்ய நீதிமன்றங்கள் வழிகாட்டும்போது, பள்ளிக்கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியப்பெருமக்களை பணிநிரந்தரம் செய்யாதிருப்பது பெரும் அநீதியாகும். பணி நிரந்தரம், பழைய ஓய்வூதிய நடைமுறை உள்ளிட்டக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்து, பகுதிநேர ஆசிரியர்கள், அரசு ஊழியர்களாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த தி.மு.க, இன்றைக்கு அவ்வாக்குறுதிகள் யாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுட்டு, வஞ்சகத்தை விளைவிப்பது அரசியல் அறத்துக்கே புறம்பானதாகும். ஆகவே, பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பணிநிரந்தரம் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது வாக்குறுதியளித்த மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.
பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளோடு நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்த முன்வராததே தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.