பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுனத் தலைவர் ராமதாஸ் - மகன் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில், கட்சியின் பொதுக்குழுவை இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரத்தில் கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார். இந்த பொதுக்குழுவிற்கு தடை கேட்ட ராமதாசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படன.பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், வன்னியர் சங்க மகளிர் மாநாடு பா.ம.க சார்பில் நாளை பூம்புகாரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மகளிர் மாநாட்டில் ராமதாஸ் பங்கேற்க உள்ளதால் இன்று தைலாபுரம் இல்லத்தில் இருந்து பூம்புகாருக்கு கார் மூலமாக புறபட்டுச் சென்றார். தொடர்ந்து பூம்புகாரில் மாநாட்டு திடலை பார்வையிடுகிறார்.
ராமதாஸ் மாநாட்டிற்கு செல்லும் போது அவருடன் மனைவி சரஸ்வதி. மூத்த மகள் காந்திமதி ஆகியோர் உடன் சென்றனர். மேலும் மருத்துவர் ராமதாசுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர சிகிச்சை அளிக்க ஏதுவாக சேலம் தனியார் மருத்துவமனையை அதிநவீன மருத்துவ வசதியுடன் கூடிய மொபைல் ஆம்புலன்ஸ் உடன் செல்கிறது.
பூம்புகாருக்கு செல்வதற்கு முன்பாக ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராமதாஸ், ஊடக நண்பர்கள் மற்றும் அனைவரும் மகளிர் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைப்பதாகவும், பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கிற மாநாடு என்றும். மேலும் "சொல்வதற்கு வேறொன்றும் இல்லை" எனவும் பதிலளித்துவிட்டு சென்றார்.