பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுனத் தலைவர் ராமதாஸ் - மகன் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . இதன்பின்னர், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார்.
இதன் காரணமாக, பா.ம.க தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு, அவரை செயல் தலைவராக நியமித்தார். இதனைத் தொடர்ந்து நடந்த வன்னியர் மாநில மாநாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு போன்றவை ராமதாஸ் - அன்புமணி இடையே இருந்த விரிசலை அதிகப்படுத்தும் விதமாக அமைந்தது.
கடந்த மே மாத இறுதியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராமதாஸ் அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதன்பிறகு, அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். ஆனால், அவரது நீக்கம் செல்லாது என அன்புமணி அறிவித்தார். இந்தப் பதவி நீக்கப் படலம் தொடர்ந்த நிலையில், பொதுக்குழுவை கூட்டுவது பற்றி இருவரும் மாறி மாறி அறிக்கை விட்டனர். புதுச்சேரியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்தார்.
இதனிடையே, ராமதாஸ் தரப்பு பா.ம.க-வின் மகளிர் அணி மாநாட்டிற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் நடத்தத் திட்டமிட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பா.ம.க எம்.எல்.ஏ அருள் உள்ளிட்டோர் இதன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பா.ம.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பா.ம.க தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டு தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், தந்தை - மகன் ஆகிய இருவரும் சேர்ந்து கையொப்பமிடும் அதிகாரத்தை வைத்துக் கொள்ளலாம் என பேசி முடித்ததாகவும், அவருடன் இருப்பவர்கள் சதி செய்ததால் பிறகு அவர் மறு தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "டாக்டர் ராமதாஸ் தான் நம்முடைய குலதெய்வம் அவர்தான் நம்முடைய வழிகாட்டி. உருவத்தில் அவர் இங்கே இல்லை என்றாலும் உள்ளத்தில் இருக்கிறார். நிரந்தரமாக அவருக்கு இங்கே ஒரு நாற்காலி இருக்கிறது இது அய்யாவுடைய நாற்காலி. ஐயா தான் நம் கட்சியை நிறுவனர் அதில் மாற்று கருத்து கிடையாது. இது ஐயாவுக்கு நிரந்தரமான நாற்காலி நிச்சயம் அவர் வருவார் என்று நம்புகிறேன். அவர்தான் நம்முடைய குலதெய்வம் சில நேரங்களில் சாமிக்கு கோபம் வரும் அதன் பிறகு நாம் காவடி எடுப்போம் தீ மிதிப்போம். இங்க சாமி பிரச்சனை இல்லை பூசாரி தான் பிரச்சனை.
நாம சாமிக்கு என்னென்ன வழிபாடு செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் பூசாரிகள் தடையாக இருக்கிறார்கள். டாக்டர் ராமதாஸ் ஒரு தேசிய தலைவர், சாதனையாளர், சமூக சீர்திருத்தவாதி. சமூக சீர்திருத்தவாதி என்றால் இந்தியாவிலேயே ஒரு ஐந்து ஆறு பேர் தான் உள்ளனர் அவர்களில் ஒருவர் தான் டாக்டர் ராமதாஸ்.
ஒருமுறை இரண்டு முறை அல்ல, இதுவரை 40 முறை சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்று உள்ளது. காலையில் சரி என்கிறார். உடன் இருப்பவர்கள் சதி செய்வதால் அடுத்த நாள் மறுக்கிறார். இருவரும் சேர்ந்து கையொப்பமிடும் அதிகாரத்தை வைத்துக் கொள்ளலாம் என பேசி முடித்தோம். அவருடன் இருப்பவர்கள் சதி செய்ததால் பிறகு அவர் மறு தெரிவித்துவிட்டார்." என்று அவர் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.