பசுமை வழிச் சாலைக்கு நிலப்பறிப்பு: பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா? – ராமதாஸ்

அரசியல் எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவதே முதன்மைப் பணி

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை – சேலம் இடையிலான பசுமைவழிச் சாலைக்காக நிலங்களை கையகப்படுத்த சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அத்திட்டத்திற்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை தாங்களாகவே முன்வந்து கொடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். உழவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடனான முதலமைச்சரின் கருத்து கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மக்கள் நலன்கள் முக்கியமல்ல… பதவியில் நீடிக்க அனுமதிக்கும் அரசியல் எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவதே முதன்மைப் பணி என்பது தான் பினாமி எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிக்கப்படாத கொள்கையாக இருந்து வருகிறது. அதனால் தான் மனசாட்சியில் தொடங்கி நல்ல ஆட்சியாளர்களுக்குரிய அத்தனை இலக்கணங்களையும் குழிதோண்டி புதைத்து விட்டு, சென்னை- சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு இயந்திரத்தை முழுமையாக களத்தில் இறக்கி, விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.

இயற்கையையும், மக்கள் வாழ்வாதாரங்களையும் பறித்து, கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைக்கப் போகும் பசுமை சாலைக்கான நிலங்களை கையகப்படுத்தித் தர வேண்டும் என்ற அடிமை சிந்தனையைத் தவிர வேறு எதுவும் அவருக்கு இல்லை என்பதால் தான் நிலப்பறிப்புக்கு எதிரான மக்களின் எதிர்ப்பும், போராட்டங்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லை. அதனால் தான் நூற்றுக்கு 4 அல்லது 5 விவசாயிகள் மட்டுமே நிலங்களை வழங்க மறுப்பதாக கூறியிருக்கிறார். பசுமைவழிச் சாலை அமைக்கும் விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை கூறியிருக்கும் அடிப்படை ஆதாரமற்ற ஆயிரமாயிரம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களில் இதுவும் ஒன்று என்பது தான் உண்மை.

முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருப்பதற்கு முற்றிலும் எதிரான சூழல் தான் களத்தில் நிலவி வருகிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக வரலாறு காணாத மக்கள் போராட்டத்தை பசுமை வழிச் சாலைத் திட்டம் எதிர்கொண்டு வருகிறது. கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களை அளவிடுவதற்காக செல்லும் அதிகாரிகளிடம் மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை காவல்துறையினரைக் கொண்டு கடத்திச் சென்று அவர்கள் இல்லாத தருணங்களில் தான் நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் அருகே நில அளவீடு செய்யச் சென்ற அதிகாரிகளை நேற்று விரட்டியடித்த மூதாட்டி ஒருவர்,‘‘ எங்களுக்கு பசுமைவழிச் சாலை தேவையில்லை. எங்களுக்கு வாழ்வளிக்கும் நிலங்களை தாரைவார்க்க நாங்கள் தயாராக இல்லை. கண்டிப்பாக நிலம் தேவை என்றால் எங்களை படுகொலை செய்து எங்கள் நிலத்தில் புதைத்து விட்டு, அதன் மீது பசுமை சாலை அமைத்துக் கொள்ளுங்கள்’’ என கண்ணீர் மல்க கதறுகிறார். நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகளில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது? என்பதற்கு இதுதான் தலைசிறந்த உதாரணமாகும்.

தமிழ்நாட்டில் சென்னையையும், சேலத்தையும் தவிர வேறு நகரங்களே இல்லை என்று முதலமைச்சர் நினைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதனால் தான், சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான இரு சாலைகளும் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் சென்னையிலிருந்து சேலத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட வேண்டும் என்று துடிக்கிறார். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், அதை விரிவுபடுத்த பினாமி அரசு அக்கறை காட்டவில்லை என்பது மட்டுமின்றி, அந்த சாலையை விரிவாக்க ஒதுக்கப்பட்ட நிதியை பசுமை சாலைக்கு மாற்ற பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்துள்ளார். இதிலிருந்தே அந்த சாலைத் திட்டத்தில் அவர் காட்டும் ஆர்வத்தையும், அதன் காரணமாக அவருக்கு கிடைக்கவிருக்கும் மலையளவு பயன்களையும் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கங்காணி வேலை செய்வது, அவற்றின் நலனுக்காக மக்கள் வரிப்பணத்தில் திட்டங்களை செயல்படுத்துவது போன்ற குற்றங்கள் ஒருபுறமிருக்க, அதற்காக மக்களின் நிலங்களை பறிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் கண்ணீர் மிகவும் வலிமையானது. திருக்குறளில் கொடுங்கோண்மை என்ற அதிகாரத்தில், இடம் பெற்றுள்ள ‘‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’’ (குறள் எண்: 555, பொருள்: ஆட்சியாளர்களின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் அந்த ஆட்சியை அழித்து விடும்) என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாகத் தான் எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. இப்போது மக்கள் சிந்தும் கண்ணீரின் பயனை பினாமிகள் விரைவில் அனுபவிப்பர்.

சென்னை – சேலம் பசுமைச் சாலை திட்டத்திற்கு 96% விவசாயிகளும், மக்களும் தாங்களாக முன்வந்து நிலங்களைக் கொடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். இது உண்மை என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் சவாலை அவர் ஏற்றுக் கொள்ளட்டும். மராட்டிய மாநிலம் ரெய்காட் பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக 35,000 ஏக்கர் நிலங்களை அரசு அடையாளம் காட்டியது. ஆனால், அந்த நிலங்களை வழங்க உழவர்கள் மறுத்த நிலையில், மக்கள் விருப்பத்தை அறிய அப்பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் கடந்த 2008-ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நிலம் வழங்குவதற்கு எதிராக பெரும்பான்மை உழவர்கள் வாக்களித்திருந்ததால் சிறப்பு பொருளாதார மண்டலம் கைவிடப்பட்டது. அதேபோன்ற பொதுவாக்கெடுப்பை 5 மாவட்ட விவசாயிகளிடம் நடத்தி அதனடிப்படையில் முடிவெடுக்க பினாமி எடப்பாடி அரசு தயாரா?” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ramadoss report regard chenani salem highways project

Next Story
அன்னிய செலாவணி மோசடி வழக்கு: தினகரனிடம் அமலாக்கத்துறை ஆவணங்கள் வழங்க உத்தரவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com