/indian-express-tamil/media/media_files/2025/10/17/ramadoss-anbumani-2-2025-10-17-07-24-30.jpg)
அன்புமணி பேசியதைக் கடுமையாகச் சாடிய ராமதாஸ், “மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான். அன்புமணிக்குத் தலைமைப் பண்பு சுத்தமாக இல்லை, அது இப்போது முற்றிப்போய்விட்டது” என்று விமர்சித்தார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தலைவர்கள் பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு கூட்டத்டதில் பேசிய அன்புமணி “அய்யாவுக்கு ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன்” என்று கூறினார்.
அன்புமணி பேசியதைக் கடுமையாகச் சாடிய ராமதாஸ், “மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான். அன்புமணிக்குத் தலைமைப் பண்பு சுத்தமாக இல்லை, அது இப்போது முற்றிப்போய்விட்டது” என்று விமர்சித்தார். இந்த வார்த்தைப் போர் பா.ம.க வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ராமதாஸை நலம் விசாரித்தனர்.
இந்தச் சூழலில், கூட்டம் ஒன்றில் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “அய்யா செக்கப் சென்றதைக்கூட சில பேர் 'உடம்பு சரியில்லை, வந்து பாருங்க' என கூறியுள்ளார்கள். அய்யாவுக்கு 87 வயதாகிறது, காலில் ஆஞ்சியோ செய்துள்ளார்கள். இது என்ன கண்காட்சியா?. நான் இருக்கும் போது காரிடர் கூட யாரும் வர மாட்டார்கள், தூங்க விட மாட்றாங்க. அய்யாவுக்கு ஏதாவது ஆனா தொலைச்சி போட்டுருவேன், சும்மா விட மாட்டேன். கோபத்தில் இருக்கேன். அய்யாவை வைத்து டிராமா பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று ஆவேசமாகப் பேசினார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய மருத்துவர் ராமதாஸ் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அன்புமணியின் இந்தக் கருத்துகளுக்கு அவர் நேரடியாக மறுப்பு தெரிவித்துப் பதிலடி கொடுத்தார்.
“மருத்துவர் ஐயா நலமாக இருக்கிறார், மருத்துவமனைக்குச் சென்றது திட்டமிட்ட பரிசோதனைதான். ஆனால், அவருடன் இருக்கும் சில பேர், 'அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை, வந்து பாருங்க' என்று சொல்வது அசிங்கமாக இருக்கிறது, 'அய்யாவை வைத்து நாடகமாடிட்டு இருக்காணுங்க' என்றெல்லாம் அன்புமணி பேசியது என் காதுக்கு வந்தது. அய்யாவை பார்த்துக்கொள்ளத் துப்பில்லை. படிக்காத, மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான். அன்புமணிக்குத் தலைமைப் பண்பு இல்லை, அது இன்று முற்றிப்போய்விட்டது. நோய் தொற்றும் அளவுக்கு நான் வியாதியில் இல்லை” என்று ராமதாஸ் மிகக் கடுமையான தொனியில் விமர்சனங்களை முன்வைத்தார்.
அரசியல் பாகுபாடின்றித் தலைவர்கள் தன்னைச் சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய ராமதாஸ், “மருத்துவமனையில் நான் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) செல்லவில்லை. ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்க வரவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.