/indian-express-tamil/media/media_files/2025/08/17/ramadoss-pmk-pattanur-2025-08-17-15-41-01.jpeg)
பொதுக்குழுவில் குவிந்திருக்கும் தொண்டர்கள் காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம் அல்ல, உணர்வோடு வந்தவர்கள் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூர் அருகே உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் மண்டபத்தில் நடந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக டாக்டர் ராமதாஸ் தொடர்வார் என்று சிறப்பு பொதுக்குழுவில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் பொதுக்குழுவில் உரையாற்றிய ராமதாஸ் கூறியதாவது; “கடந்த காலமும் நீங்கள்தான், வருங்காலமும் நீங்கள்தான், எதிர்காலமும் நீங்கள் தான். பொதுக்குழுவில் வாசிக்கப்பட்ட 36 தீர்மானங்கள் ஒரு சமுதாயத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான தீர்மானங்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பாடுபட்டு வருகிறேன், பாடுபட போகிறேன். தமிழ்நாட்டில் என்ன ஒரு பிரச்சனைகள் நடந்தாலும் அதனை கண்டித்து அறிக்கை விட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.
மறைந்த நண்பர் கலைஞர் கொடுத்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 115 சமுதாயத்தினர் பயனடைந்து வருகின்றனர். 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். 10.5% இட ஒதுக்கீட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் ஒரே வாரத்தில் கொடுக்கலாம்.
எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி கிடைக்கும், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அதிகாரத்தை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். தேர்தலில் நல்ல கூட்டணியை நாம் ஏற்படுத்துவோம். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 36 தீர்மானங்களையும் தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று பொது குழு வலியுறுத்துகிறது.
இந்த பொதுக்குழு வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு, தற்போது வந்துள்ள கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் கண்டதில்லை. பொதுக்குழுவில் குவிந்திருக்கும் தொண்டர்கள் காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம் அல்ல, உணர்வோடு வந்தவர்கள். எந்த முடிவு எடுத்தாலும் உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று ஓடோடி வந்திருக்கிறீர்கள், உங்கள் நம்பிக்கை வீண் போகாது.
கூட்டணி குறித்து முழு அதிகாரத்தை எனக்கு கொடுத்திருந்தாலும் உங்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் எந்த முடிவாக இருந்தாலும் எடுப்பேன்.” இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.