Advertisment

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது உழவர்களை அழிக்கும் சதி! - ராமதாஸ்

த்திய அரசே அவ்வாறு ஆணையிட்டிருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே அதன் சொந்த செலவில் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நேரடி கொள்முதல் குறித்து ராமதாஸ்

நேரடி கொள்முதல் குறித்து ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது; உழவர்களுக்கு இதைவிட மோசமான துரோகத்தை இழைக்க முடியாது.

Advertisment

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஆண்டு எனப்படுவது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதி நெல் கொள்முதலுக்கான விலை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு , கொள்முதல் தொடங்கப்படுவது வழக்கம். குறுவை நெல் அறுவடை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பா அறுவடை முடிந்த பிறகு கொள்முதல் அளவு குறைந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் மாதம் வரை இயங்கும். அறுவடை நடக்காவிட்டாலும் உழவர்கள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்படும்.

ஆனால், நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டதன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்ப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கி விட்டு நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள உழவர் அமைப்புகள் செப்டம்பர் 3-ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதுபற்றி விளக்கம் அளிக்காமல் அமைதி காப்பது சரியல்ல.

இந்தியாவில் உழவர்களின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதன் ஒரு கட்டமாக வேளாண்மை விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலைகளை நிர்ணயம் செய்தது. அது போதுமானதல்ல என்று உழவர்கள் கூறி வரும் நிலையில், ஒட்டுமொத்த கொள்முதலையே நிறுத்தும்படி மத்திய அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒருபுறம் கொள்முதல் விலையை உயர்த்தி விட்டு, மறுபுறம் கொள்முதலை நிறுத்துவது பசியில் வாடும் மனிதனுக்கு உணவைக் கொடுத்து விட்டு, உயிரைப் பறிக்கும் கொடுமைக்கு இணையானதாகும்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்தே நேரடி கொள்முதலையும், பொதுவினியோகத் திட்டத்தையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் நேரடி பயன் மாற்றத் திட்டம் ஆகும். உணவு மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் இந்த திட்டத்தை பல மாநிலங்களில் சோதனை அடிப்படையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. நியாயவிலைக்கடைகளில் மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்த பயனாளிகளுக்கு, புதிய முறைப்படி பணமாக மானியம் வழங்கப்படும் என்பதால் நியாயவிலைக் கடைகளே தேவையிருக்காது; அதனால் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டியிருக்காது. இத்திட்டத்தை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் நோக்குடன் தான் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை தனியார் வணிகர்களிடம் தான் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு நெல் உள்ளிட்ட விளைபொருட்ளை அடிமாட்டு விலைக்கு வாங்குவர். அதேநேரத்தில் அரசு நெல் கொள்முதல் செய்யாவிட்டால் நியாயவிலைக்கடைகளில் வழங்குவதற்கு அரிசி கிடைக்காது. இதனால் நியாயவிலைக் கடைகளை மூட வேண்டியிருக்கும். அத்தகைய நிலை ஏற்பட்டால் பொதுமக்களும், விவசாயிகளும் வாழவே முடியாமல் போய் விடும். அதனால் தான் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதை விவசாயிகளை அழிக்கும் சதி என்று குற்றஞ்சாற்றுகிறேன்.

நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசே அவ்வாறு ஆணையிட்டிருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே அதன் சொந்த செலவில் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும்; அவற்றை பொதுவினியோகத் திட்டத்தின்படி நியாய விலைக்கடைகளில் வழங்கி உழவர்களையும், மக்களையும் காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment