Advertisment

ஒரு வாரத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் போராட்டம்: ராமதாஸ்

பினாமி அரசு லோக்அயுக்தா அமைக்க துரும்பைக்கூட அசைக்கவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu news today live

tamil nadu news today live

லோக் ஆயுக்தா அமைக்கத் தவறினால் போராட்டம் : ஒருவாரத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்கத் தவறினால் பாமக போராட்டம் நடத்தும் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊழலை ஒழிப்பதற்கான லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஈடுபட்டிருக்கிறது. லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 83 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், லோக்அயுக்தா அமைப்பை தமிழக அரசு இன்னும் அமைக்காதது ஈடு இணையற்ற மோசடி ஆகும்.

மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்பதற்கிணங்க, தமிழ்நாட்டில் மாறிமாறி ஊழல் அரசுகள் தான் நடைபெறுகின்றன என்பதால், ஊழலை ஒழிப்பதற்கான லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்த எந்த முயற்சியும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் லோக்அயுக்தா சட்டம் 1971ஆம் ஆண்டில் முதன் முதலில் மராட்டிய மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டு, லோக்அயுக்தா அமைப்பு உருவாக்கப் பட்டது. அதன்பின், 47 ஆண்டுகள் ஆகிவிட்டநிலையில், தமிழகத்தில் இன்றுவரை லோக்அயுக்தா அமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதிலிருந்தே தமிழக ஆட்சியாளர்கள் லோக்அயுக்தா அமைப்புக்கு எந்த அளவுக்கு அஞ்சி, நடுங்கி, பின்வாங்கி வந்திருக்கின்றனர் என்பதை எளிதாக உணர முடியும்.

இந்தியாவில் 22 மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்திலும் அத்தகைய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 2018ஆம் ஆண்டை ஊழல் ஒழிப்பு ஆண்டாக அறிவித்த பா.ம.க. இந்த ஆண்டின் முதல் போராட்டமாக லோக்அயுக்தா அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தை கடந்த 04.01.2018 அன்று எனது தலைமையில் நடத்தியது. அதன்பின், உடனடியாக லோக்அயுக்தா அமைப்பை உருவாக்கும்படி, உச்சநீதிமன்றமும் நெருக்கடி கொடுத்ததன் காரணமாக, கடந்த ஜூலை 9ஆம் தேதி சட்டப்பேரவையில் லோக்அயுக்தா சட்டம் முழுமையான விவாதமின்றி, பெயரளவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அச்சட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்அயுக்தா சட்டம், ஊழலை ஒழித்துவிடுமா? என்றால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அச்சட்டத்தில் ஏராளமான ஓட்டைகளும், குளறுபடிகளும் உள்ளன. அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவது ஒப்பந்தங்களை வழங்குவதிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் தான். ஆனால், இவை இரண்டிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக் அயுக்தாவுக்கு இல்லை. அதேபோல், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்த புகார்களை லோக் அயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. லோக் அயுக்தா அமைப்பின் தலைவராக அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியோ, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியோ தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூட லோக் அயுக்தாவாக நியமிக்கப்படலாம் என்று அரசு கூறுகிறது. அதிமுகவின் மாவட்டச் செயலாளர் போன்று செயல்பட்ட பல முன்னாள் நீதிபதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களில் எவரேனும் லோக் அயுக்தா ஆக நியமிக்கப்பட்டால், தமிழ்நாட்டில் ஊழலுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுவிடும்.

இந்த அளவுக்கு வலிமையில்லாத லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கு கூட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியில் தொடங்கி, அனைத்து அமைச்சர்கள் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் அரசு நிர்வாகத்தில் ஊழல் நடந்தால், அதை தண்டிக்கவேண்டிய பெரும் பொறுப்பு, கையூட்டு தடுப்புப் பிரிவுக்கு உள்ளது. ஆனால், தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை அப்பிரிவில் நியமிப்பதன் மூலம், ஊழல் புகார்களில் இருந்து ஆட்சியாளர்கள் தப்பித்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சரின் பினாமிகளுக்கும், உறவினர்களுக்கும் வழங்கப்பட்டதில் நடந்த ஊழலுக்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் போதிலும், அதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கையூட்டு தடுப்புப்பிரிவு கூறுவதிலிருந்தே அது ஆளுங்கட்சியின் அங்கமாக மாறியிருப்பது தெரிகிறது.

இத்தகைய சூழலில் வலிமையான லோக்அயுக்தாவை அமைப்பதன் மூலம்தான் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஒட்டுமொத்த ஊழலையும் குத்தகை எடுத்துள்ள ஆளுங்கட்சியினர், அதற்கு தடையாக இருக்கும் என்பதால்தான் லோக்அயுக்தா அமைப்பை உருவாக்க தயங்குகின்றனர். தமிழ்நாட்டில் லோக்அயுக்தா அமைப்பு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வராதநிலையில், லோக்அயுக்தா அமைப்பை உருவாக்குவதை தமிழக அரசு தாமதப்படுத்தி வருகிறது. லோக்அயுக்தாவை உடனடியாக அமைக்கவேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வலியுறுத்தினேன். ஆனால், பினாமி அரசு லோக்அயுக்தா அமைக்க துரும்பைக்கூட அசைக்கவில்லை.

லோக்அயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சிறை செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் தான் லோக்அயுக்தாவை பினாமி அரசு தாமதப்படுத்துகிறது. லோக்அயுக்தா சட்டத்தை இயற்றிவிட்டு லோக்அயுக்தா அமைப்பை உருவாக்காமல் தாமதப்படுத்துவதை ஏற்கமுடியாது. தமிழ்நாட்டில் லோக்அயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 6ஆம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைகின்றன. அதற்குள் அப்பழுக்கற்ற முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் லோக்அயுக்தா அமைப்பு அமைக்கப்படாவிட்டால், சட்டம் இயற்றப்பட்டதன் 100வது நாளில் மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுக்கிறேன்." என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Dr Ramadoss Pmk Lok Ayukta
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment