மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மாற்றம்: ஸ்டெர்லைட்டை திறக்க துணை போவதா? – ராமதாஸ்

அந்தக் கடமையை சிறப்பாக செய்யக்கூடியவர் நசிமுதீன் தான் எனும் போது அவரை அரசு மாற்றம் செய்தது ஏன்?

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் திறம்பட பணியாற்றி வந்த இ.ஆ.ப. அதிகாரி நசிமுதீன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அந்த ஆலையின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென செய்யப்பட்டுள்ள இந்த இடமாற்றம் கண்டிக்கத்தக்கது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு உள்ளிட்ட யாராலும், எதுவும் செய்ய முடியாது என்ற அதிகாரத் திமிரில் அதன் நிர்வாகம் இருந்தபோது, அது செய்துள்ள விதிமீறல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அந்த ஆலையை மூடும்படி கடந்த மே 23-ஆம் தேதி ஆணையிட்டவர் நசிமுதீன் ஆவார். அந்த ஆணையின் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக ஆணையை மே 29-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. கடந்த 15 மாதங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள அவருக்குத் தான் ஆலையின் அத்துமீறல்கள் குறித்த விவரங்கள் அத்துபடியாகும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அதை எப்படியாவது திறந்து விட வேண்டும் என்பதில் அதன் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசின் முடிவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், இதுவரை மொத்தம் 3 கட்ட வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதாகவும், உலக நீதிமன்றத்திற்கு சென்றால் கூட அதை மாற்ற முடியாது என்றும் தமிழக அரசு இறுமாப்புடன் கூறிவந்த நிலையில், அதை உடைத்த ஸ்டெர்லைட் ஆலை, நிர்வாகப் பணிகளுக்காக ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயத்திடம் அனுமதி பெற்றது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகப்பணிகளுக்காக திறக்கும் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கை நடத்தும்படி ஆணையிட்டது.

அடுத்தக்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிகளை மீறியிருக்கிறது என்பதை நிரூபிக்கத் தேவையான எந்த ஆதாரத்தையும் தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை என்று குற்றஞ்சாற்றிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை ஏதேனும் விதிமீறலில் ஈடுபட்டிருக்கிறதா? என்பது குறித்து விசாரிக்க பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வசிஃப்தார் தலைமையில் மூன்று உறுப்பினர் குழுவை அமைத்துள்ளது. அக்குழுவின் விசாரணை அடுத்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மிகக்கடுமையான விதிமீறல்களில் ஈடுபட்டிருக்கிறது; அதனால் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உள்ளது. அந்தக் கடமையை சிறப்பாக செய்யக்கூடியவர் நசிமுதீன் தான் எனும் போது அவரை அரசு மாற்றம் செய்தது ஏன்? என்பது தான் மில்லியன் டாலர் வினா.

நசிமுதீனுக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள மூத்த இ.ஆ.ப. அதிகாரி ஷம்பு கல்லோலிகரும் அப்பழுக்கற்ற அதிகாரி ஆவார். ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை. அடுத்த 10 நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

நசிமுதீன் கடந்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி முதல் சுற்றுச்சூழல்துறை செயலாளர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் 2016-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி முதல் குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனராக கல்லோலிகர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இருவருமே சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில் அவர்களை பணிமாற்றம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பதை விளக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிப்பதில் தமிழக அரசுக்கு தொடக்கத்திலிருந்தே விருப்பம் இல்லை. மக்கள் எழுச்சிக்கும், அரசியல் அழுத்தத்துக்கும் பணிந்து தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இப்போது ஸ்டெர்லைட் தடை விலக வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகத் தெரிகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தான் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. தமிழக அரசு இப்போது இழைத்து வரும் துரோகங்கள் மற்றும் தவறுகளால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டால் அதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் அங்குள்ள மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, சுற்றுச்சூழல்துறை செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து இ.ஆ.ப அதிகாரி நசிமுதீனை இடம் மாற்றும் முடிவை கைவிட்டு, ஸ்டெர்லைட் சிக்கல் ஓயும் வரை அப்பதவியில் அவர் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ramadoss statement about sterlite

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express