Advertisment

நெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை? - ராமதாஸ்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சேர்த்து 20,000 டன் நெல் கூட இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெல் கொள்முதல் குறித்து ராமதாஸ்

நெல் கொள்முதல் குறித்து ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியட்டுள்ள அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. உழவர்கள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல், ஏதேனும் காரணங்களைக் கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர்.

Advertisment

2018-19 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூட்டை கட்ட சாக்கு இல்லை; சேமித்து வைக்க இட வசதி இல்லை என்று கூறி அக்டோபர் மாதத் தொடக்கத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. பல இடங்களில் உழவர் அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் பயனாக நெல் கொள்முதல் தொடங்கப்பட்டாலும், இன்று வரை அது முழுமையான அளவை எட்டவில்லை.

தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் 1564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்கு கொள்முதல் நிலையங்கள் கூட இன்னும் திறக்கப்படவில்லை என்பது தான் உண்மை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 காவிரி பாசன மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால், 3 மாவட்டங்களிலும் சேர்த்து 300 கொள்முதல் நிலையங்கள் கூட இதுவரை திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களிலும் முறையாக நெல் கொள்முதல் நடக்கவில்லை. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 200 குவிண்டால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யும் பணியாளர்கள், அதற்கு மேல் உழவர்களிடமிருந்து நெல் வாங்க மறுக்கின்றனர்.

நெல்லை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதற்காக கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறும் காரணம் நெல் ஈரப்பதமாக இருக்கிறது என்பது தான். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத வாதம் ஆகும். பொதுவாக 17% வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் எடுத்துக் கொள்ளப்படும். வெயில் காலங்களில் அறுவடை செய்யப்படும் சம்பா பருவ நெல்லுக்குத் தான் இந்த ஈரப்பத அளவு பொருந்துமே தவிர, மழைக்காலங்களில் அறுவடை செய்யப்படும் குறுவை நெல்லுக்கு பொருந்தாது. கடந்த காலங்களில் பலமுறை குறுவை நெல்லுக்கான ஈரப்பத அளவை அதிகரித்து கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல், இந்த முறையும் செய்யாமல், ஈரப்பதத்தை காரணம் காட்டி உழவர்களின் நெல்லை திருப்பி அனுப்புவது மிகப்பெரிய அநீதியும், துரோகமும் ஆகும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை வாங்க அதிகாரிகள் மறுப்பதால், வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு உழவர்கள் ஆளாகியுள்ளனர். குறுவை சாகுபடிக்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்; அடுத்த பருவ சாகுபடிக்கு தயாராக வேண்டும் என ஏராளமான கடமைகள் இருப்பதால் இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. இந்த உண்மை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால், உழவர்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் தங்களிடமுள்ள நெல்லை தனியாரிடம் வந்த விலைக்கு விற்கும் சூழலுக்கு ஆளாக்குகின்றனர். உழவர்களை பாதுகாக்க வேண்டிய அரசே உழவர்களைச் சுரண்டுவதும், தனியார் வணிகர்களின் கொள்ளையை தடுக்க வேண்டிய அரசே அவர்களுக்கு தரகர்களாக மாறி வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் பெருங்குற்றங்கள்.

தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் குறைந்தது 20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சேர்த்து 20,000 டன் நெல் கூட இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை என்று உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த ஆண்டிலும் இதே அளவில் தான் நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால்,11.54 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இவை அனைத்துக்கும் காரணம் காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் முறையாக நெல் கொள்முதல் செய்யாமல் தனியார் நெல் வாங்குவதற்கு ஏற்ற சுழலை தமிழக அரசே உருவாக்கிக் கொடுப்பது தான்.

நெல்லுக்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலையே போதுமானதல்ல எனும் போது, தனியார் வணிகர்கள் கொடுக்கும் அடிமாட்டு விலையை வைத்துக் கொண்டு விதை நெல்லும், உரமும் வாங்கியக் கடனைக் கூட அடைக்க முடியாது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் தமிழக அரசு கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். ஈரப்பதத்தின் அளவு சற்று அதிகமாக இருந்தாலும் நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும் என கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அரசு ஆணையிட வேண்டும்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tamilnadu Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment