Advertisment

வெள்ளத்தில் தவிக்கும் டெல்டா மண்டலம்: உணவு, நீர் வழங்காமல் அரசு உறங்குவதா? - ராமதாஸ்

முதலமைச்சர் இன்று வரை செல்லவில்லை. இனியும் செல்வாரா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராமதாஸ் அறிக்கை

ராமதாஸ் அறிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட தமிழக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், பவானி அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 50 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்தத் தண்ணீரின் ஒரு பகுதி காவிரியிலும், பெரும்பகுதி கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டிருப்பதால் இரு ஆறுகளின் கரையோரப்பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட தூத்தூர், முட்டுவாஞ்சேரி, மேலராமநல்லூர், வைப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் தட்டுமால், குடிகாடு, கொத்தங்குடி, நாகை மாவட்டம் நாதல்படுகை, முதலை மேடு, வெள்ளை மணல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே திட்டுக்காட்டூர், கீழக்குண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், வேளக்குடி, மடத்தான்தோப்பு பழைய நல்லூர், பெராம்பட்டு, அகரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கு காரணம் ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களின் கரைகள் வலுப்படுத்தப்படாதது தான். தஞ்சாவூர் மாவட்டம் தட்டுமால் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரை உடைந்ததால் தான் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மிக மோசமான அளவில் மணல் கொள்ளை நடத்தியது, கரைகளை பலப்படுத்தாது, கொள்ளிடத்திற்குள் அமைந்துள்ள தீவுகளில் வாழும் மக்கள் மாவட்டத்தின் மற்றப் பகுதிகளுக்கு செல்ல பாலங்களை அமைக்காதது என அரசின் தவறுகள் ஏராளமாக உள்ளன. அவை ஒருபுறம் இருக்க வெள்ளம் ஏற்பட்ட பிறகாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் தங்களின் சொந்த முயற்சியில் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனர். கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்னீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேறு ஏதேனும் இடங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறை பணியாளர்கள் சுற்றுக்காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், அத்தகைய பணிகளோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. இதனால் அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகக்கூடும்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளார். ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் இன்று வரை செல்லவில்லை. இனியும் செல்வாரா? என்பதும் தெரியவில்லை.

கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் இருப்பதால் பெரும்பான்மையான ஊடகங்கள் அது குறித்தே செய்தி வெளியிட்டு வருகின்றன. அதை தவறு என்று கூற முடியாது. ஆனால், ஊடக வெளிச்சம் முழுவதும் கேரளத்தின் மீது குவிந்திருப்பதால் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக வெளிவரவில்லை. ஆனாலும், இந்த பாதிப்புகளை அரசு மதிப்பிட்டு போதிய உதவிகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் மக்களுக்கு உதவிகளை செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment