சென்னையில் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், அவர்களை விட மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் அநீதியானது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2000, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6,800 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், இழப்பீட்டையும் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் தென்படுகிறது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவி சிறிதும் போதுமானதல்ல.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, அதிலும் 33 சதவீதத்துக்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும், ஏக்கருக்கு ரூ.6,800 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது சம்பா பருவத்தில் விதைக்காகவும், அடியுரத்துக்காகவும் விவசாயிகள் செய்த செலவைக் கூட ஈடு செய்யாது. கடந்த ஆண்டு நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தால் அழிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. தமிழக அரசும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு என்.எல்.சியிடமிருந்து இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்தது.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது தமிழக விவசாயிகளுக்கு மட்டும் ஏக்கருக்கு வெறும் ரூ.6,800 இழப்பீடு வழங்குவது நியாயமானது அல்ல. ஒரு ஏக்கரில் நெல் பயிரை சாகுபடி செய்ய ரூ.30 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்குவது தான் சரியானதாக இருக்கும். இல்லாவிட்டால் அவர்கள் கடனாளியாகி விடுவார்கள்.
அதேபோல், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஏக்கருக்கு ரூ.9,000, மானாவாரி பயிர்களுக்கு ரூ.3,400, மாடுகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.4000, கோழிகளுக்கு ரூ.100 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். இவை அனைத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என்பது அவர்களை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணம் இயற்கையின் சீற்றம் என்பதையும் கடந்து ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் என்பதை அனைவரும் அறிவார்கள். ஒருபுறம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது என்றால், இன்னொருபுறம் சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி வினாடிக்கு 1.68 லட்சத்துக்கும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது தான் பேரழிவுக்கு காரணமாகும். அந்த வகையிலும் மக்களின் துயரங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
சென்னையில் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், அவர்களை விட மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் அநீதியானது. இது அவர்களின் மன வேதனையை அதிகரிக்கவே செய்யும்.
எனவே, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; அதுமட்டுமின்றி, பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை முழுமையாக பெற்றுத் தரவும் அரசு முன்வர வேண்டும்.
கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.1.20 லட்சம் வீதமும், நிலக்கடலைக்கு ரூ.33,000 வீதமும், பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1.25 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் துயரத்தை முழுமையாக துடைக்கும் வகையில் அனைத்து வகை பயிர்க்கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.