திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடை பயிற்சி மேற்கொண்டபோது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், திருச்சி மாநகர காவல்துறையில் தொடங்கி, சிபிசிஐடி, சிபிஐ வரை சென்று பல்வேறு விசாரணை குழுக்கள் விசாரித்தும் இதுவரை கொலையாளிகள் யார் என்பது கண்டறியப்படவில்லை.
இந்த வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தமிழகத்தின் முக்கியமான வழக்குகளில் சிக்கிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்திட அனுமதி கேட்டு திருச்சி ஜேஎம் 6 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதில் தென்கோவன் என்கின்ற சண்முகம் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மற்ற 12 நபர்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனை அடுத்து 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, நீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார்.
அதன்பேரில், சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டில்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த கடிதத்தின்பேரில், ஜன.17 ஆம் தேதி (இன்று) முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டில்லி ஆய்வக அலுவலர்கள் சம்மதம் தெரிவித்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு கடிதம் அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 நபர்களில் சாமிரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து, லெப்ட் செந்தில் ஆகிய 12 பேரிடமும் இன்று 17ஆம் தேதி துவங்கி 21 ஆம் தேதி வரை உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் நடத்தப்படுகிறது.
இன்று முதல் நாளொன்றுக்கு 3 பேர் வீதம் 4 நாட்களுக்குள் 12 நபர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் கூறுகையில், நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் விரைவில் தெரியவரும். இந்த அறிவியல் சார்ந்த பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.