தி.மு.க முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலானய்வு குழு விசாரித்து வருகிறது. வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த குழு முடிவு செய்தது.
அதன்படி உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரி திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். ஒருவர் மறுப்பு தெரிவித்தார். உடற்தகுதி பரிசோதனை அறிக்கையுடன் வருகிற 21-ம் தேதி அனைவரையும் குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜர்படுத்த நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், லட்சுமி நாராயணன் ஆகிய 6 பேருக்கும் நேற்று (நவம்பர் 18) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 5 பேர் மோகன்ராம், கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து ஆகியோருக்கு இன்று (நவம்பர் 19) பரிசோதனை செய்யப்பட்டது. இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் என ஐந்து டாக்டர்கள் கொண்ட குழுவினர் பரிசோதனை செய்தனர்.

ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி, எக்ஸ்ரே, இதய பரிசோதனை செய்யப்பட்டது எனவும் அவர்கள் மனதளவில் நலமாக உள்ளனரா என்பது கண்டறியயப்படுகிறது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 பேருக்கும் உடற்தகுதி பரிசோதனை செய்யப்பட்டு முடிந்துள்ளது. இந்த பரிசோதனை சான்றிதழ்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் 12 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான நாள் மற்றும் அனுமதியை நீதிபதி சிவக்குமார் வரும் 21-ம் தேதி அறிவிப்பார்.

ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேக நபர்களாக சிறப்பு புலனாய்வு குழுவினரால் அடையாளம் காணப்பட்ட 13 பேரில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொண்ட நிலையில் ஒருவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil