scorecardresearch

10 ஆண்டுக்கு பிறகு சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு: 2 பேர் சிக்கினர்

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 2 பேரிடம் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 ஆண்டுக்கு பிறகு சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு: 2 பேர் சிக்கினர்

திமுக மூத்த தலைவரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலை நடைபயிற்சிக்கு சென்றவர் கல்லணை சாலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த கொலை வழக்கில்
சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற இந்த கொலை வழக்கில், திமுக ஆட்சியில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ராமஜெயம் கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொலை குறித்து திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராமஜெயத்தின் மனைவி லதா நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என பல்வேறு கட்ட விசாரணை பிரிவுகளுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. பலரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், குற்றவாளிகள் குறித்த தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கை தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனடிப்படையில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிபதி வி.பாரதிதாசன் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் குறித்த தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் சம்மானம் வழங்கப்படும் என எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தக்குழு விசாரணை அறிக்கையை 2 முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விசாரணைக்கு மேலும் அவகாசம் வேண்டும் என கோரியிருந்தனர். அவகாசம் வழங்கப்பட்டதையடுத்து தொடர் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் 2 பேரை இறுதி கட்ட விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரை விசாரித்து வருவதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் கூறியுள்ளனர். இவர்கள் சென்னையைச் சேர்ந்த எம்எல்ஏ பாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற நிலையில் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 ஆண்டுக்கு பிறகு ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளது.

செய்தி க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ramajeyam murder case sit drills 2 persons

Best of Express