Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து 70 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திட மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புத்தேந்தல் ஊராட்சியில் இன்று (01.03.2023) கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய்க்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தலைமையேற் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தாக்கக்கூடிய கால்காணை மற்றும் வாய்காணை நோயத் தொற்றை தடுப்பதற்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த நோய் என்பது வைரஸ் தொற்றால் உருவாகிறது. இதனால் நோய் தாக்குதலுக்கு உண்டான கால்நடைகளுக்கு வால் உற்பத்தி குறைவு ஏற்படுதல், காளை மாடுகளுக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டால் வேலை திறன் குறைவு ஏற்படுதல், அதேபோல் கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு பாதிப்பு ஏற்படுதல், இளம் கன்றுகளுக்கு இந்த நோய் பாதிப்பால் இறப்பு போன்ற சூழல் ஏற்படுதல், இதன் மூலம் கறவை மாடு வளர்ப்போருக்கு மிகுந்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த இந்த கோமாரி நோயினை முற்றிலும் தடுப்பதற்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தி அதன் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்கிட அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே நடப்பாண்டிற்கு இரண்டு முறை கோமாரி நோய் தடுப்பதற்கான தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மூன்றாம் கட்டமாக இந்த தடுப்பூசி முகாம் இன்று 01.03.2023 முதல் துவக்கப்பட்டு 21 நாட்கள் வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் 25 மருத்துவ குழுவினர் பணி மேற்கொண்டு மாவட்டத்தில் 70,000 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி 100% இலக்கிட்டை எய்திடும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. இது மட்டுமின்றி இந்த சிறப்பு முகாம் முடிந்தாலும் விடுபட்ட கால்நடைகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் கூடுதலாக 10 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு உரிய காலங்களில் தடுப்பூசிகளை செலுத்தி நன்றாக பராமரித்து பயன்பெற்றிட வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடைபெறும் பகுதியில் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை அழைத்துச் சென்று தடுப்பூசிகளை போட்டுச் சென்று பயன்பெற வேண்டும். அதேபோல் யாரேனும் விடுபட்டிருந்தாலும் கூட அவர்களுக்கு எடுத்துச் சொல்லி கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி 100% உயிரிழப்பின்றி ஆரோக்கியமுடன் பாதுகாத்து பயன்பெற்றிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதன்பின்னர் புத்தேந்தல் கிராமத்தில் 200 கால்நடைகள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.இளங்கோவன், உதவி இயக்குநர் மரு.நேருக்குமார், கால்நடை மருத்துவர் மரு.டாப்ணி, புத்தேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத், கால்நடை பராமரிப்புத்துறை உதவி ஆய்வாளர்கள் ஜெகதீஸ்வரி, பூங்கோதை, பஞ்சவர்ணம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil