தமிழகத்தின் கடலோர மாவட்டம் ராமநாதபுரம். இதன் கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள், கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்றவை பல ஆண்டுகளாக கடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இலங்கையில் இருந்து அவ்வப்போது தங்க கட்டிகள் கடத்தி வரும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 24 ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசல் ரஹ்மான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து சுமார் 5,970 கிலோ போதை பொருள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பைசல் ரஹ்மானிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சென்னை செங்குன்றம் பகுதியில் போதை பொருளுடன் பதுங்கியிருந்த சென்னையை சேர்ந்த மன்சூர் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த செய்யது இப்ராகீம் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மேலும் சுமார் ஒரு கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த இந்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.70 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த செய்யது இப்ராகீம் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சிறுபான்மை பிரிவின் மாவட்ட துணை தலைவராக உள்ளார். ராமநாதபுரம் பழைய பேருந்து நிலைய பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் இவர், ஏற்கனவே தே.மு.தி.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் சிக்கிய செய்யது இப்ராகீமை தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். போதைப் பொருள் தொடர்புடைய வழக்குகளில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க-வினர் அவ்வப்போது சிக்கி வருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“