/indian-express-tamil/media/media_files/2025/09/03/whatsapp-image-2025-09-03-19-49-17.jpeg)
Trichy
சென்னை: ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை முதலமைச்சரின் அனுமதியைப் பெறாமலேயே அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், ஒட்டுமொத்தமாக தமிழக அரசு அதற்குத் தடை விதித்துள்ளது. ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்க, அரசின் அனுமதியின்றியே சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
அரசுக்குத் தெரியாமல் அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும், ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கான அனுமதியைத் திரும்பப் பெறுவதோடு, மத்திய அரசின் ஏலப் பட்டியலிலிருந்தும் ராமநாதபுரத்தை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் நிரம்பினால் தான் வைகை பாசனத்தில் உபரிநீர் பல பகுதிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அரசாணை உள்ளது. ஆனால், 136 அடி நிரம்பிய நிலையிலும், 58ஆம் கால்வாய் உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்க முடியாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
உங்களுடன் முதல்வர் திட்டம்
'உங்களுடன் முதல்வர்' திட்டத்தில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிலத்தின் மதிப்புக்கேற்ப லஞ்சம் கேட்கப்படுகிறது. குடும்பத் தலைவி உதவித் திட்டம், முதியோர் உதவித் திட்டம் போன்றவற்றுக்கும் பேரம் பேசும் நிலை உள்ளது. மேலும், அரசு அலுவலகங்களில் அதிக காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், இத்திட்டத்தால் அலுவலகப் பணிகள் முடங்கி கிடக்கின்றன. இத்திட்டத்தில் பயனடைந்தவர்களின் விவரங்களை கிராமங்கள் தோறும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி விலக்கு
டெல்லியில் நடைபெற்று வரும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளோம். குறிப்பாக, பாக்கெட்டுகளில் விற்கப்படும் அரிசி, பருப்பு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் உட்பட பல்வேறு உணவுப் பொருட்களுக்கும், டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கும், கதிர் அறுவடை இயந்திரம், உழவு இயந்திரம், பம்ப் செட் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களுக்கும் முழு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
பருத்தி இறக்குமதி வரி குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பு இல்லாத வகையில் இறக்குமதிக்கான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நெல் கொள்முதல்
நெல் கொள்முதலில் தனியாரை அனுமதிக்கக் கூடாது. காவிரி டெல்டாவில் குறுவை நெல் கொள்முதலை விரைந்து தொடங்க வேண்டும். சுமார் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி அறுவடைக்குத் தயாராக உள்ளது. இதனை உடனுக்குடன் கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் உணவுத் துறை, வேளாண் துறை மற்றும் விவசாயிகளின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டுத் திட்டமிட வேண்டும்.
இந்தச் சந்திப்பின்போது மாநிலப் பொதுச் செயலாளர் வி.கே.வி.துரைசாமி, சென்னை செய்தித் தொடர்பாளர் சைதை சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.