Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இன்று (03.03.2023) காலை 6.00 மணிக்கு கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று பக்தர்கள் செல்லும் படகுகளை கொடியசைத்து பாதுகாப்புடன் சென்று வர வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழா 2023 மார்ச் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. இவ்விழாவில் பங்கேற்க இந்திய அரசு அனுமதியுடன் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 2408 பேர் விண்ணப்பித்து அவர்களுக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டு இன்று காலை 6.00 மணிக்கு 60 விசைப்படகுகள் மற்றும் 11 நாட்டுப்படகுகள் மூலம் செல்கின்றனர். பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக 71 படகுகளும் முறையாக ஆய்வு செய்து பயன்படுத்தப்படுகிறது.
மேலும் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பக்தர்கள் கச்சத்தீவு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வரும்வரை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்திய கடற்படை, தமிழக கடற்படை, மாவட்ட காவல்துறை, மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்புடன் சென்று அரசு வழிகாட்டுதலை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்று வரவேண்டும். பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக கடலோர கடற்படை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் காத்தவராயன் பிரபாவதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil