பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என ரயில்வே துறை அமைச்சருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.
பாம்பன் புதிய ரயில் பாலம் தரம் குறைவாக இருப்பதாக இந்திய ரயில்வேக்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாம்பன் ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறந்திட வேண்டும் என இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து நவாஸ் கனி எம்.பி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே மேம்பாலத்தில் கடல் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முழுமையான நடவடிக்கை இல்லை. தூண்களில் தற்போதே அரிப்பு தொடங்கியுள்ளது. புதிய பாலத்தில் சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் அதிக ஒலி ஏற்படுகிறது. புதிய பாலத்தில் உள்ள குறைகளை மறு ஆய்வு செய்து சரி செய்திட வேண்டும் என இந்திய ரயில்வேக்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ரயில்வே அதிகாரியே இது போன்ற அச்சமிகு ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பாலத்தின் தரத்தை மறு ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்து விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நவாஸ் கனி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“