இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை டிசம்பர் 1 அன்று திருநெல்வேலியில் அவதூறாக பேசியோரை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் டாக்டர் ராம்குமார் தலைமை வகித்தார். இதில் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்பகுதி மக்கள் போலீசாரின் தடுப்பை மீறி முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அப்பகுதிக்கு எஸ்.பி., சத்தீஷ் விரைந்தார். அவதூறு பேசியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மறியலில் ஈடுபட்டோரிடம் எஸ்.பி உறுதியளித்தார்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் டாக்டர் ராம்குமார், அகில இந்திய பார்வார்ட் பிளாக் தேசிய செயலர் சுரேஷ், பசும்பொன் தேசிய கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம், முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை தலைவர் இசக்கி ராஜா, தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையா, பூலித்தேவன் பாசறை தலைவர் பவானி வேல்முருகன், தென்னாட்டு மக்கள் கட்சி தலைவர் கணேசன், ஐந்து மாவட்ட விவசாய சங்க செயலாளர் செந்தூர்பாண்டி, மூவேந்தர் முன்னணி கழக மாநில தலைமை செயலாளர் வேலுச்சாமி, நேதாஜி இளைஞர் சங்க தலைவர் பசும்பொன் முத்து, மூவேந்தர் முன்னணி கழக செயலாளர் செந்தில்ராஜ், வீரப்பெருமாள், சுரேஷ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.