ராமநாதபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பரம் கிராமம் உள்பட 3 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ராமநாதபுரத்தில் புதியதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. புதிய விமான நிலையம் அமைப்பதற்கு உச்சிப்புளி பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் கையப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை, மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட கும்பரம், ராமன் வலசை, பூசாரி வலசை, தெற்கு வாணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைப்பதை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர். அப்பகுதியில் விமான நிலையம் அமைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அந்தப் ஆயிரக் கணக்கான ஏக்கரில் தென்னை, நெல் விவசாயம் நடைபெறுகிறது என்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருப்பதாகவும் எள், மிளகாய் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும், அங்கே புதிய விமான நிலையம் அமைத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் தெரிவித்தனர். மேலும், விமான நிலையத்திற்காக தங்கள் நிலங்களை விட்டுத் தர முடியாது எனவும் தெரிவித்தனர்.