ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்கமான வாகன தணிக்கை மேற்கொண்டடனர். அப்போது சுமார் 3.80 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் அரியவகை அம்பர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை சட்ட விரோதமாக வைத்திருந்ததற்காக மதுரையைச் சேர்ந்த த.ராஜன் (60), ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூ.ஜெகதீஷ் சந்திரபோஸ் (45), கு.ராஜலிங்கம் (37), ஹா.சாகுல் ஹமீது (40), பரமக்குடியைச் சேர்ந்த நா.சுபாஷ்பாபு (30), தேனியைச் சேர்ந்த வி.ஜெயக்குமார் (33) ஆகியரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரிஸ் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 (திருத்தப்பட்டது 2022) இன் படி அட்டவணை 1-ல் வருவதினாலும் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை மேல்நடவடிக்கைக்காகவும் போலீசார் ராமநாதபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை ராமநாதபுரம் மாண்புமிகு குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் இருப்பு காவலில் வைக்க உத்திரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் கிளை சிறையில் 15 நாட்கள் இருப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பர்கிரிஸ் (Ambergris) என்றால் என்ன?
எண்ணெய் திமிங்கில (Sperm Whale) வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris), திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். உலக அளவில் பல நூற்றாண்டுகளாக அம்பெர்கிரிஸ் ஒரு வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய் முதல் 2.00 கோடி ரூபாய் வரை இருக்கலாம். எனவே அம்பர்கிரிஸ் சட்ட விரோதமாக வணிகம் செய்யப்படுகிறது.
"எண்ணெய் திமிங்கலமானது (Sperm Whale), வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 (திருத்தப்பட்டது 2022) இன் படி அட்டவணை 1 இல் அட்டவணைப்படுத்தப்பட்டு உச்சபட்ச பாதுகாப்பை பெறும் வன உயிரினமாகும். ஆகவே, ஸ்பெர்ம் திமிங்கலங்களை வேட்டையாடுவது அல்லது அம்பர்கிரிஸ் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் அம்பர்கிரிஸ் வணிகம் செய்வது தொடர்பாக யாரேனும் நேரடியாகவோ அல்லது அலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டாலோ வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்". ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி: ச.மார்ட்டின் ஜெயராஜ் - ராமநாதபுரம் மாவட்டம்.