Ramanathapuram | tasmac: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிலையில், தேவர் ஜெயந்தியை ஒட்டி 28, 29, 30 ஆகிய 3 தினங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது பின்வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் மற்றும் பசும்பொன் நகரில் எதிர்வரும் 30.10.2023 அன்று நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சியினை முன்னிட்டு பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கினைப் பாதுகாக்கும் பொருட்டு 28, 29 மற்றும் 30.10.2023 ஆகிய மூன்று தினங்கள் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் பொருட்டு அக்டோபர் 28.10.2023, 29.10.2023 மற்றும் 30.10.2023 ஆகிய மூன்று நாட்கள் முழுமையாக மூடி வைத்திட ஆணையிடப்படுகிறது.
மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“