ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மேலாளர், கிளை மேலாளர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கிளை மேலாளரை ஒரு தரப்பினர் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 5 ஊழியர்களை கிளை மேலாளர் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பணிநீக்கத்தை கண்டித்து ஒரு தரப்பை சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள், சங்க நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு பணிமனை முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டினம் உள்ளிட்ட வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. நள்ளிரவில் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். தகவல் அறிந்து வந்த மேலாளர் உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பின்னர் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“