ராமநாதபுரத்தில், வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Advertisment
ராமநாதபுரம் டவுன் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் ( வயது 22).இவரது நண்பர்களுக்கும் கான்சாய் தெரு பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 31ம் தேதி, அருண்பிரகாஷும், அவரது நண்பர் யோகேஸ்வரன் (23) என்பவரும் கள்ளர் தெரு பிரதான சாலையிலுள்ள வங்கி ஏடிஏம் மையம் அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் கும்பலாக வந்த சிலர் திடீரென அருண்பிரகாஷின் வலது பக்க முதுகில் குத்தியுள்ளனர். அவருடன் இருந்த யோகேஸ்வரனுக்கும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். அவர்களில் அருண் பிரகாஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். யோகேஸ்வரன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலையாளிகளை கைது செய்யக் கோரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் உறவினர்கள், அப்பகுதி இளைஞர்கள், பா.ஜ., இந்து முன்னணியினர், மருது சேனை அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். ஏ.டி.எஸ்.பி., ஜெயசிங், டி.எஸ்.பி., வெள்ளதுரை ஆகியோர், கொலையாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.
போலீசார் கூறியதாவது:கத்திக்குத்தில் காயம் அடைந்த யோகேஸ்வரன் தரப்பினர் முன்விரோதத்தில், பகல், 12:00 மணிக்கு சரவணன், அவரது நண்பர் சபீக் ரஹ்மான் ஆகியோரை தாக்கினர். இருவரும் ஆதரவாளர்களிடம் கூறினர். பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, 12 பேர் டூ - வீலர்களில் சென்றனர். அருண் பிரகாஷ், யோகேஸ்வரன் ஆகியோரை, சேக் அப்துல் ரஹ்மான் தரப்பினர் கத்தியால் குத்தியதில் ஒருவர் இறந்தார்.இவ்வாறு, போலீசார் கூறினர்.
இந்த சம்பவத்திற்கு வகுப்புவாத வன்முறை காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸ் டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.
கொலையான அருண் பிரகாஷ், விநாயகர் சிலை அமைப்பு கமிட்டியில் இருந்தவர் என்பதால், பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் குப்புராம், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்து அமைப்பு நிர்வாகி கூறியதாவது, ''முதல் குற்றவாளியாக உள்ள சேக் அப்துல் ரஹ்மான், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்,'' என்றார்.அப்பகுதியில் பதற்றம்நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil