Advertisment

பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டும் ஆந்திரம்: அரசு வேடிக்கை பார்ப்பதா? - ராமதாஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசு

பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசு

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் பாலாற்றின் துணையாற்றில் ஆந்திர அரசு புதிய தடுப்பணை கட்டத் தொடங்கியுள்ளது. பாலாற்று நீர் தமிழகத்துக்கு வருவதைத் தடுக்கும் வகையில் ஏராளமான தடுப்பணைகளை ஆந்திரா கட்டி வரும் நிலையில் அவற்றை தமிழக அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது.

Advertisment

தமிழக, ஆந்திர எல்லையில் புல்லூரை அடுத்த பெத்த வங்கா பகுதியில் பாலாற்றின் துணையாற்றில் 10 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்ட தடுப்பணையை ஆந்திர அரசு அமைத்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் இந்தப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதுதவிர துணை ஆறுகளின் குறுக்கே வேறு சில இடங்களிலும் தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தால் ஆந்திரத்திலிருந்து தமிழகத்திற்கு பாலாற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதற்கு வாய்ப்பில்லை என்று அப்பகுதி உழவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், ஆந்திர அரசின் இந்த சதித்திட்டத்தை தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாலாற்றின் துணை ஆறான குசா ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளைக் கட்டியது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் செய்தாலும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, பாலாற்றின் துணை ஆறுகளில் தடுப்பணை கட்டுவது ஆந்திர அரசின் உரிமை என்றும், அதில் அரசு தலையிட முடியாது என்றும் தமிழக பொறியாளர்களே விளக்கம் அளித்தக் கொடுமையும் நிகழ்ந்தது. ஆனால், இவை எதையும் பினாமி அரசு கண்டுகொள்ளவில்லை.

கர்நாடகத்தில் உருவாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழ்நாட்டில் பாய்கிறது. ஆந்திரத்தில் மொத்தம் 33 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே மொத்தம் 22 தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியிருக்கிறது. இவை போதாதென்று கடந்த 2016&ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழக-&ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு அதிகரித்தது. இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன், அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினேன். அதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியதுடன் தமது கடமையை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முடித்துக் கொண்டார். ஆனால், ஆந்திர அரசு ஓயவில்லை. பாலாற்றின் குறுக்கே உள்ள 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பதுடன், பாலாற்றின் துணை ஆறுகளில் 7 புதிய தடுப்பணைகளையும் ஆந்திரா அமைத்தது.

பாலாற்றில் ஏற்கெனவே தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும் போதிலும், கடுமையான மழைக்காலங்களில் மட்டும் ஓரளவு நீர் தடுப்பணைகளை மீறி தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தது. இதற்கு காரணம் பாலாற்றின் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகளின் உயரம் குறைவாக இருந்தது தான். ஆனால், இப்போது தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படுவதுடன் புதிய தடுப்பணைகளும் கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்காது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது. இதை தமிழக அரசு புரிந்து கொள்ள மறுப்பது மிகவும் கவலையளிக்கிறது.

பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளை கட்டக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளை கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகளை கட்டுவதற்கு தமிழக பினாமி அரசின் அலட்சியம் தான் காரணமாகும்.

இப்போதும் கூட தடுப்பணைகள் பணி நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பாலாறு பாசன விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இந்த விஷயத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளையும், உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Dr Ramadoss Pmk Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment