தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்ததாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஷோபாவின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில், ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், ஊழியர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே நேற்று (மார்ச் 19) அங்கு பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஷோபா கரந்த்லாஜே, தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்ததாக கூறினார். “தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து தமிழர்கள் இங்கு வந்து வெடிகுண்டு வைத்தார்கள். கஃபேயில் வெடிகுண்டு வைத்தார்கள்”. என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் X தளப் பதிவில் கூறுகையில், "ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனம். பா.ஜ.க-வின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் மறுப்பார்கள்.
Strongly condemn Union BJP Minister @ShobhaBJP's reckless statement. One must either be an NIA official or closely linked to the #RameshwaramCafeBlast to make such claims. Clearly, she lacks the authority for such assertions. Tamilians and Kannadigas alike will reject this… https://t.co/wIgk4oK3dh
— M.K.Stalin (@mkstalin) March 19, 2024
அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க-வில் பிரதமர் முதல் தொண்டர்வரை வரை அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம் இந்த வெறுப்பு பேச்சுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "தமிழக மக்களை தீவிரவாதிகளாகப் பொதுமைப்படுத்தும் நோக்கில் அமைச்சரின் வெறுப்புப் பேச்சுக்கு கண்டனம். பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரி உள்ளார். பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் தனது கருத்தை வாபஸ் பெறுகிறேன். குண்டுவெடிப்பில் தொடர்புடைய கிருஷ்ணகிரி வனப் பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் குறித்தே நான் பேசினேன் எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.