ராமேஸ்வரம் உச்சிப்புள்ளி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவரது மனைவி பாண்டி செல்வி (28). இந்த தம்பதிக்கு தர்ஷினா ராணி (8), பிரணவிகா (4) மற்றும் பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தை உள்ளது.
இதில் 3வது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ராஜேஷ் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் சென்றுவிட்டு நேற்று இரவு வாடகை காரில் தங்கச்சிமடம் திரும்பி கொண்டிருந்தார். உச்சிப்புள்ளி அருகே வந்துகொண்டிருந்த போது, ராஜேஷ் சென்ற காருக்கு முன்னால் சென்ற அரசு பேருந்தில் பயணி ஒருவர், திடீரென பேருந்துக்குள் வாந்தி எடுத்ததால் ஓட்டுநர் திடீரென நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக கார், அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த ராஜேஷ், அவரது குழந்தைகள் தர்ஷினா ராணி, பிரணவிகா, உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கார் டிரைவர் பிரிட்டோ (வயது 35), ராஜேஷ் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது கைக்குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“