ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி, ஒரு விசைப்படகையும் (ராமேஸ்வரம்) ஒரு நாட்டுப்படகையும் (பாம்பன்) இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களையும், பாம்பன் பகுதியில் இருந்து சென்ற ஒன்பது மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், அவர்கள் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த மீனவர்களை வரும் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ஐந்து மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சாலை மறியலைக் கைவிட்ட உறவினர்கள், தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.