தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரும், பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா பயணம் மேற்கொண்டார். அவர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சென்று வந்தார். அப்போது அவரை அங்கிருந்த இணை ஆணையர், செயல் அலுவலருமான மாரியப்பன் பிரம்மாண்டமாக மாலை மரியாதையுடன் வரவேற்றார்.
இந்தநிலையில் இன்று அவர் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராமகுமார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், இணை ஆணையரும், செயல் அலுவலருமான செ.மாரியப்பன் நிர்வாக நலன் கருதியும், துறையின் நிர்வாக நலன் கருதியும், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆகம விதிகளை மீறி மாரியப்பன் செயல்பட்ட குற்றச்சாட்டில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சர்வ கட்சியினர் தொடர்ச்சியாக கடந்த ஐந்து மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏழு மாதங்களாக பல்வேறு போராட்டம் நடத்திய பின்பும் பணியிட மாற்றம் செய்ய மறுத்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் மற்றும் அண்ணாமலைக்கு பூர்வாங்க மரியாதை செய்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இவர் கடந்த மூன்று மாதங்களில் திமுக அமைச்சர்கள், கடந்த மாதம் முதல்வர் மனைவி துர்கா உள்ளிட்ட யாரையுமே இவர் வரவேற்காத நிலையில் அமித்ஷாவை மட்டும் பிரம்மாண்டமாக வரவேற்ற நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என பேசப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் (05.06.2023)ம் தேதி தான் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக சிவராமகுமார் பொறுப்பேற்ற நிலையில் அவர் தற்போது ராமேஸ்வரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஸ்ரீரங்கம்இணை ஆணையருக்கு ஆளுங்கட்சி பிரமுகரால் பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கப்பட்ட நிலையில் அமைச்சரிடம் நேரடியாக பணியிட மாற்றம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"