நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து!

உலகில் அமைதி நிலவி, இன்பம் பெருகி, அன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மசூதிகளில் சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

தமிழக மக்களுக்கு அரசியல்  தலைவர்கள் மற்றும் பிரபலங்களும்  ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ரமலான் என்கிற மகிழ்ச்சியான தருணத்தில், சக மனிதர்களுடன் சகிப்பு தன்மையுடன் பழகுவோம் என்று உறுதி ஏற்பதாக கூறியுள்ளார். பிரார்த்தனை, உயர் பண்புகள் மற்றும் இரக்கம் ஆகியவற்றின் வழிகளை தத்தெடுத்து, சமுதாயத்தில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்போம் எனவும் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார். இந்த நல்ல நாளில், உலகில் அமைதி நிலவி, இன்பம் பெருகி, அன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமிய மக்களுக்கு தனது ரம்லான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எதிர் கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை, தமது செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்களுக்கு, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அதே போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமிய மக்களுக்கு தனது ரம்லான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்லான் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

×Close
×Close