மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு வந்தவர்களுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் நீர் மோர் வழங்கினர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களுக்கு மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது.
ரம்ஜான் மாதம், முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படி , ஈதுல் பித்ர் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இந்த நிலையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு தொழுகை முடிந்து வந்த அனைவருக்கும் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது.
இதைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி, கோவையில் சுமார் ஐந்து இலட்சம் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருவதாகவும், கோடை வெயில் கொளுத்தி வருவதால் தொழுகைக்கு வருபவர்களுக்கு நீர் மோர் வழங்கப்படுவதாக கூறிய அவர், இரண்டு வாகனங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை முடித்து வருபவர்களுக்கு நீர் மோர் வழங்கப்படுவதாகக் கூறினார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்கள் சுமார் பத்தாயிரம் பேருக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.