கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க கவுன்சிலர் ரங்கநாயகி தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 100 வார்டுகள் உள்ளது. இங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டபோது 96 வார்டுகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. 1 வார்டில் எஸ்.டி.பி.ஐயும், 3 வார்டில் அதிமுகவும் வெற்றி பெற்றது.
இதனையடுத்து கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டே ஆண்டுகளில் உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
இதையடுத்து, காலியாக உள்ள திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கணபதி பகுதியை சேர்ந்த 29-வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்களுக்கு செல்போன் தடை விதிக்கப்பட்டு போலீசாரின் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவகுரு பிரபாகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திமுக மேயர் வேட்பாளர் ரங்கநாயகியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்றால் கை உயர்த்தி ரங்கநாயகியை ஒரு மனதாக தேர்வு செய்யப்படும், அப்படி எதிர்த்து போட்டியிட்டால் வாக்குப்பதிவு செய்யப்பட்டு யார் மேயர் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி அரிவிப்பார் என்று கூறப்பட்டது. இந்த தேர்தலுக்கு அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் எஸ்டிபிஐ கவுன்சிலர் என நான்கு பேர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் திருநெல்வேலியில் ஏற்பட்டது போல கடைசி நேர சலசலப்புகளை தவிர்க்க மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு கவுன்சிலர்கள் வரவழைக்கப்பட்டனர். இங்கு அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் கவுன்சிலர்களுக்கு அறிவுரை வழங்கிய பிறகு தேர்தலுக்கு சென்றனர்.
இதில் கவுன்சிலர் சாந்தி முருகன் சில கேள்விகளை எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. முறையாக நிதி கொடுப்பதில்லை என அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.