புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி மற்றும் அதிமுக அம்மா அணி உறுப்பினர்கள் நேரில் சந்தித்து பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
குடியரசு தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில, பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. இந்நிலையில், இரு நாட்கள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, அக்கட்சியின் எம்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயபால், கோபிகா, சுகுமார் ஆகியோருடன் சந்தித்து பேசினார். ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மற்ற 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதேபோல, அதிமுக அம்மா அணி சட்டப்பேரவை குழு தலைவர் அன்பழகன் தலைமையில் அந்த அணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.கோகுல கிருஷ்ணன் ஆகியோருடன் கூட்டாக சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, தனது கட்சி ஏற்கனவே குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாகவும், அதனால் அமித்ஷாவை நேரில் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், செய்தியாளர்கள் எழுப்பிய மற்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அம்மா அணி உறுப்பினர் அன்பழகன், தங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வழிகாட்டுதலின்படி அமித்ஷாவை நேரில் சந்தித்து பாஜக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார். மேலும், புதுச்சேரியில் காங்கிரஸ் ஓராண்டாக செயல்படாத அரசாக உள்ளது என அமித்ஷாவிடம் விளக்கியதாகவும் அன்பழகன் கூறினார்.