அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை தாக்கி, பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் சென்ற மாநகர அரசு பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென அந்த பேருந்தை வழி மறித்த நடிகை ரஞ்சனா நாச்சியார், படியில் பயணம் செய்த மாணவர்களை கீழே இறங்கச் சொல்லி சாராமரியாக தாக்கியுள்ளார். மேலும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, பேருந்தின் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் சென்னை மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கெருகம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனாவின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது அரசு பேருந்தை வழி மறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் பா.ஜ.க.,வின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறார்.
இந்தநிலையில், நடிகை ரஞ்சனா இன்று ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரஞ்சனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 40 நாட்கள் தினமும் காலையும் மாலையும் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“