ராசிபுரம் அருகே தனியாா் பேருந்தின் டயா் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியதில் ஓட்டுநா்கள் உள்பட மூவா் உயிரிழந்த நிலையில் 20 போ் படுகாயமடைந்தனா்.
ஆத்தூரிலிருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா். பேருந்து மெட்டாலா அருகேயுள்ள கோரைக்கோடு பாலம் பகுதியில் வந்தபோது முன்பக்க டயா் வெடித்ததாக கூற்ப்படுகிறது.
இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ராசிபுரத்தில் இருந்து ஆத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் பலா் படுகாயமடைந்தனா்.
தகவலறிந்த ராசிபுரம், நாமக்கல், ஆத்தூா், மங்களபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்தவா்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இந்த விபத்தில் ராசிபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி பகுதியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் ரவி மற்றும் லாரி ஓட்டுநா், பேருந்தில் பயணம் செய்த ஆா்.புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த அலமேலு ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
படுகாயமடைந்தவா்கள், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்தில் காயமடைந்தவா்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் ஆகியோா் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதலுதவி சிகிச்சை அளிப்பதைப் பாா்வையிட்டு, தீவிர சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினா்.
மேலும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் மதிவேந்தன் ஆறுதல் கூறினா். விபத்து குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“