மாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் : ரத்தினவேல் பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்

ரத்தினவேல் பாண்டியன், மாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

ரத்தினவேல் பாண்டியன், மாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

ரத்தினவேல் பாண்டியன் மறைவு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள், இன்று (28.2. 2018) காலை 10.30 மணி அளவில் இயற்கை எய்தினார்கள். நேற்று இரவு பத்து மணி வரை அவரது அருகில்தான் இருந்தேன். புன்னகை பூத்தவாறு என் கரங்களைப் பற்றிக்கொண்டு இருந்தார். விடைபெறுகையில், ‘விரைவில் நலம் பெறுவீர்கள்’ என்று கூறிப் புறப்பட்டேன்; புன்னகைத்தார்கள்.

இன்று காலையில் அப்பெருந்தகை இம்மண்ணை விட்டு மறைந்தார் என்ற செய்தி என் தலையில் பேரிடியென விழுந்தது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் திருப்புடை மருதூர் என்ற கிராமத்தில், 1929 மார்ச் 13 ஆம் நாள் பிறந்த இரத்தினவேல் பாண்டியன், மூன்றாம் நாளிலேயே தன் அன்னையைப் பறிகொடுத்தார். கிராமத்துப் பள்ளியில் பயின்று, பாளை தூய சவேரியார் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் புகழ்மிக்க வழக்குரைஞர் செல்லப்பாண்டியன் அவர்களிடம் ஜூனியராகப் பயிற்சி பெற்றார்.

மாணவப் பருவத்திலேயே திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைதானார். பின்னர் பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நெல்லை மாவட்டத்தில் தி.மு.கழகத்தைக் கண் போல் காத்து வளர்த்தார்.

1965 இந்தி எதிர்ப்புப் மற்றும் விலைவாசிப் போராட்டங்களில் சிறைவாசம் ஏற்றார். அண்ணன் டாக்டர் கலைஞர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் இருந்தபோது, விடுமுறை நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் சிறைக்குச் சென்று பார்த்ததோடு, பேரறிஞர் அண்ணா அவர்களையும் கலைஞரைப் பார்க்க அழைத்துச் சென்றார்.

1966 ஆம் ஆண்டு, வத்தலக்குண்டில் நடைபெற்ற தி.மு.க. மதுரை மாவட்ட மாநாட்டுக்குத் தலைமை ஏற்றுப் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றார். 68 ல் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆனார். 71 ல் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் ஆனார். 74 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார். 88ல் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆக இருந்தார். 88 டிசம்பர் 14 ல் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்.

அங்கே, மண்டல் கமிசன் வழக்கில் நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் வழங்கிய தீர்ப்புதான், இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டியது. அதேபோன்று, கர்நாடக மாநில முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை அரசு, மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, அது தவறு எனக் கூறி நீதியரசர் வழங்கிய தீர்ப்பு, மாநில சுயாட்சி உரிமைக்கு அரண் அமைத்தது. 94 மார்ச் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

1994 ஏப்ரல் 12 முதல் 97 ஏப்ரல் 30 வரை மத்திய அரசின் ஐந்தாவது ஊதியக்குழுவின் தலைவராக இருந்து அவர் வழங்கிய அறிக்கை, அனைத்து இந்தியாவிலும், இலட்சோப லட்சம் ஊழியர்களுக்குப் புதுவாழ்வு தந்தது. 1999 மே 7 முதல், 2000 ஏப்ரல் 30 வரை தென் மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலை குறித்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வகித்தார்.

காஷ்மீர் மாநிலத்தின் பிரக்போரா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணையத்தின் தலைவராக 2000 மே 16 முதல் அக்டோபர் 27 வரை பொறுப்பு ஏற்று, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டபோதும் அஞ்சாது விசாரணை நடத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர் தந்த 225 பக்க அறிக்கை, காவல்துறையினரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உதவித் தொகை கிடைக்க வழி செய்தது.

2006 ஆகஸ்ட் 14 முதல், 2009 ஆகஸ்ட் 13 வரை, தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வகித்துள்ளார். அப்போது அவர்கள் தந்த அறிக்கை, தென் மாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்கான ஆவணமாக அமைந்தது.

அவர் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான திருப்புடைமருதூரில் புகழ்பெற்ற பழமையான நாறும்பூநாத சுவாமி ஆலயத்திற்கு, மிகப்பெரிய திருப்பணி செய்து, கோவிலைக் கட்டி எழுப்பிய மார்த்தாண்ட வர்ம மன்னரின் புகழுக்கு இணையாகப் பெயர் பெற்றார். தனது வாழ்க்கை வரலாறு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். 2017 ஆகஸ்ட் 26 ல் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தாக்குர் அவர்களால் வெளியிடப்பட்டது.

அந்த நூலை, மனித உரிமைகள் வழக்குரைஞர்கள் மையத்தின் சார்பில் நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், 2017 டிசம்பர் 4 ஆம் நாள், சென்னை பாரிமுனை இராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெளியிட, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில், மனித உரிமை வழக்கறிஞர்கள் மையம் நடத்திய நிகழ்ச்சியில், இருபதுக்கும் மேற்பட்ட, இந்நாள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்த நிகழ்ச்சி, சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆயிற்று.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பில் அவர் இருந்தபோதுதான், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமநீதிச் சோழன் சிலையை நிறுவினார்.
1965 ஆம் ஆண்டில், என் கிராமத்திற்கு அருகில் உள்ள திருவேங்கடத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் முன்பு உரையாற்றிய நாளில் இருந்து, என்னை அவரது குடும்பத்தின் மூத்த பிள்ளையாகவே ஏற்றுக்கொண்டார்.

1969 ல் அண்ணாச்சியிடம் ஜூனியர் வழக்குரைஞராகச் சேர்ந்தேன். நெல்லை மாவட்டத்தில் தி.மு.கழகத்தில் எனக்கு ஒரு அடித்தளம் அமைய வழிகாட்டினார். 1971 ஜூன் 14 ல் குற்றாலத்தில் அண்ணாச்சி தலைமையில், டாக்டர் நாவலர் என் திருமணத்தை நடத்தி வைத்தார். என் மூன்று பிள்ளைகளின் திருமணத்திற்கும் அவரே தலைமை வகித்தார். அண்ணாச்சியின் துணைவியார் லலிதா அம்மையார் அவர்கள், 2010 மார்ச் 15 ஆம் தேதி இயற்கை எய்தினார். அந்தப் பிரிவு, அண்ணாச்சியின் உள்ளத்தையும் உடலையும் வருத்தியது. சில நாள்களாக லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.

அண்ணாச்சியின் மூத்த மகன் சுப்பையா, தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கின்றார். இரண்டாவது மகன் ரவிச்சந்திரன், அமெரிக்காவில் தொழில் நிறுவனம் நடத்துகின்றார். சேகர், காவேரி மணியம் ஆகிய மகன்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றார்கள். நான்காவது மகன் கந்தசாமி சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணி ஆற்றுகின்றார். ஒரே மகள் இலட்சுமி-அஜய்குமார் ஆகியோரின் மகன், அண்ணாச்சியின் பேரன் திருமணம் மூன்று நாள்களுக்கு முன்பு சென்னையில் நடந்தபோது, அண்ணாச்சி கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

அண்ணாச்சி அவர்களால்தான் என் பொதுவாழ்வுப் படிக்கட்டுகள் அமைந்தன. என் தந்தையை இழந்தபோது எப்படி நான் மனம் உடைந்தேனோ, அதேபோன்று அண்ணாச்சியின் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் தவிக்கின்றேன். அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் புகழ் காலமெல்லாம் தமிழகத்தில் நிலைத்து இருக்கும்.

அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அண்ணாச்சி அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், அவர் மீது அன்பு கொண்ட இலட்சோபலட்சம் மக்கள் அனைவருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.

 

×Close
×Close