ரத்தினவேல் பாண்டியன் வாழ்க்கை குறிப்பு : 6 ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்

ரத்தினவேல் பாண்டியன், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி. இன்று மரணம் அடைந்த அவரது வாழ்க்கை குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. அவருக்கு வயது 89.

By: February 28, 2018, 2:06:31 PM

ரத்தினவேல் பாண்டியன், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி. இன்று மரணம் அடைந்த அவரது வாழ்க்கை குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. அவருக்கு வயது 89.

ரத்தினவேல் பாண்டியன் 1929 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தில் பிறந்தார். 1971 ஆம் ஆண்டு தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1974 பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

ரத்தினவேல் பாண்டியன் 1988-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் 1994 மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின், 2007 ஆம் தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். ரத்தினவேல் பாண்டியன் மகன் சுப்பையா தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

ரத்தினவேல் பாண்டியனின் ஊரான திருப்புடை மருதூர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது. இங்கு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். அம்பாசமுத்திரத்தில் உள்ள தீர்த்தபதி உயர் நிலைப் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தார். பின்னர் பாளையம்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் பட்டம் பயின்றார். சென்னை அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் 1954 ஆம் சட்ட படிப்பை முடித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே. நாராயணசாமி முதலியார் மூத்த வழக்கறிஞராக இருந்தபோது, அவரிடம் ஜூனியர் வழக்கறிஞராக சேர்ந்து தொழில் கற்றார். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தேர்ந்த வழக்கறிஞராக, சுமார் 17 ஆண்டுகாலம் தொழில் செய்தார். 1971 ஆகஸ்டில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக குற்றவியல் தலைமை வழக்கறிஞர் பதவியேற்றார். விடுமுறை கால நீதிமன்ற பணிக்காலத்தில், சிறிது காலம் வரை , அரசின் தலைமை வழக்கறிஞராகவும், அரசாங்க வழக்கறிஞர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

பின்னர், 1974 ஆம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீபதியாக நியமிக்கப்பட்டார். 1988 ஜனவரி 18 ஆம் தேதி முதல், அதே ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி வரை, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார். பின்னர், அதே ஆண்டில் டிசம்பர் 14 ஆம் தேதி , உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுச் சென்றார். சுமார் 6 ஆண்டு காலம் வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர், 1994 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி ஓய்வு பெற்றார். பின்னர், 2007 ஆம் ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் திமுக தலைவர் கருணாநிதியிடம், மிகுந்த நட்பு பாராட்டி வந்தார். இவரிடம் ஜூனியராக இருந்து வழக்கறிஞர் தொழில் கற்றவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஒருவர். சென்னை அண்ணா நகரில், குடும்பத்தோடு, வசித்து வந்தார். இன்று காலையில் அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Rathinavel pandian life details

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X