உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை இல்லத்தில் பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன். திருநெல்வேலியை சேர்ந்தவர். ஆரம்பகாலங்களில் திராவிட இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். திமுக.வின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்து, அந்தப் பகுதியில் கட்சியை வளர்த்தவர் இவர். பின்னர் அரசியலில் இருந்து விலகி பிரபலமான வழக்கறிஞராக திகழ்ந்தார்.
ரத்தினவேல் பாண்டியனின் ஜூனியர் வழக்கறிஞர்தான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதியாக பல்வேறு முக்கிய தீர்ப்புகளை ரத்தினவேல் பாண்டியன் வழங்கியிருக்கிறார். தேசிய பிற்பட்டோர் ஆணைய தலைவராகவும், தென் மாவட்ட கலவர தடுப்பு பரிந்துரை ஆணைய தலைவராகவும் இவரது பணி பெரிதும் பாராட்டப்பட்டது.
ரத்தினவேல் பாண்டியனுக்கு வயது 90. சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வசித்து வந்தார் அவர். சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (பிப்ரவரி 28) காலையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்தார்.