ரேஷன் கடைகளுக்கு அரசு புதிய உத்தரவு: 'இந்த பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைத்தால் போதும்' | Indian Express Tamil

ரேஷன் கடைகளுக்கு அரசு புதிய உத்தரவு: ‘இந்த பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைத்தால் போதும்’

ரேஷன் அட்டைதாரர்களில் வங்கி கணக்கு வைத்திருக்கும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்தால் மட்டும் போதுமானது என கூட்டுறவுத் துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு அரசு புதிய உத்தரவு: ‘இந்த பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைத்தால் போதும்’

பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்தவகையில் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு பணம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு பணத்தை நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரேஷன் அட்டை-வங்கி கணக்கு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில், தமிழ்நாட்டில் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள் இல்லை. அதில், குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு வங்கி கணக்குகள் இருந்தும், ஆதார் இணைக்கப்படாததால் வங்கி கணக்கு இல்லை எனத் தரவுகள் தெரிவிப்பதாக கூட்டுறவுத் துறை கூறியுள்ளது.

மேலும், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அண்மையில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருந்தார். அதில், அந்தந்த பகுதி ரேஷன் கடைப் பணியாளர்கள், பயனர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஏற்கனவே பயனர்கள் வங்கி கணக்கு இருந்தால், அந்த வங்கி கணக்கு பாஸ் புக்கின் முதல் பக்க நகல் மற்றும் குடும்ப அட்டை எண், குடும்பத் தலைவர் எண் குறிப்பிட்டு கேட்டுப் பெற வேண்டும்.
அதனை பெற்று பணியாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது 30.11.2022 தேதியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில்,”14,86,582 குடும்ப அட்டைதாரர்களில் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி அவர்களுக்கு அறிவுரை வழங்கினால் மட்டும் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து வேறு எந்த தகவல்களையும் பெற வேண்டியது இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், வங்கி கணக்கு இல்லாதவர்கள் அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கி. பின் அதன் விவரங்களை ரேஷன் பணியாளரிடம் கொடுத்து இணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ration card bank account number linking update